“ப்ரீபெய்ட் டாக்ஸி ஆன்லைன் புக்கிங் செயலி” – சென்னை விமான நிலையத்தில் அறிமுகம்
இந்திய நாட்டின் முக்கியமான விமானநிலையங்களில் ஒன்றான சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ப்ரீபெய்ட் டாக்ஸி ஆன்லைன் புக்கிங் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோடிக்கணக்கான பயணிகள் ஆண்டுதோறும் பயன்பெற்று வருகின்றனர்.
இதனால், விமான நிலையத்திலிருந்து நகரின் பல பகுதிகளுக்கு செல்ல ப்ரீபெய்ட் டாக்ஸிகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கவுன்ட்டரில் நீண்ட வரிசையில் நின்று டாக்ஸி பெற வேண்டிய சிரமம் மற்றும் கூடுதல் கட்டணம் தொடர்பான புகார்களை தவிர்க்கும் வகையில், இந்த புதிய ஆன்லைன் செயலி தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாக்ஸி யூனியன் சார்பில் அறிக்கை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “இந்த செயலி மூலம் பயணிகள் முன்கூட்டியே தங்கள் பயண இடம், தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி டாக்ஸியை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
விமான நிலையம் வந்தவுடன், பதிவு செய்த விவரத்தை காட்டினாலே உடனடியாக டாக்ஸி ஒதுக்கப்படும். இதனால் பயணிகள் நேர விரயமின்றி எளிதாகவும் பாதுகாப்பாகவும் தங்கள் இலக்கை அடையலாம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
