“டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் வழக்கு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு” – சென்னை ஐகோர்ட்
டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்குகளின் தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2021 முதல் 2023ஆம் வரையிலான காலகட்டத்தில் 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் 397 கோடி ரூபாய் முறைகேட்டில் நடந்துள்ளதாகக் கூறி சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன்பு இன்று ( 23.04.2026 ) விசாரணைக்கு வந்தது. அப்போது,அறப்போர் இயக்கத்தின் தரப்பில், டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் அனைவரும் ஒரே விலையை குறிப்பிட்டதால் தான் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
இது குறித்து அதிமுக நிர்வாகி சரவணன் தரப்பில், ஆரம்பகட்ட விசாரணையில் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என புகார்களை முடித்து வைத்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை அளித்துள்ள நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவு வரும் வரை காத்திருந்திருக்கலாம் என்றும் அறப்போர் இயக்கம் அனைத்து ஆதாரங்களையும் வழங்கி இருக்கிறது, அமைச்சர், மின் வாரிய உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, டான்ஜெட்கோ தரப்பில், 2021-2023ஆம் ஆண்டுகளில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறுவது தவறு என தெரிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் இருவரும் அரசியல் உள்நோக்கத்தோடும், விளம்பர நோக்கத்தோடும் வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள், டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் தொடர்பான ஒப்பந்தத்தில் அனைத்து விண்ணப்பதாரர்களும் ஒரே விலையை குறிப்பிடுவது என்பது 1987ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்படும் நடைமுறை என்று வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
