சிறுமிக்கு பாலியல் தொல்லை – கால் டாக்சி ஓட்டுநர் போக்சோவில் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வயது சிறுமியின் குளியலறை காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கால் டாக்சி ஓட்டுநரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கணவரை பிரிந்து தனது 17 வயது மகளுடன் தனிமையில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2024ம் ஆண்டு செவிலியர் பணிக்காக மஸ்கட் நாட்டிற்கு சென்ற நிலையில் தனது மகளை தாத்தா, பாட்டியின் பாதுகாப்பில் விட்டுச்சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த 2025 ஆம் ஆண்டு மாணவியின் தாய் ஊர் திரும்பியபோது மகளுக்காக வைத்திருந்த 5 சவரன் நகை மற்றும் மோதிரங்கள் மாயமானதைக் கண்டு அதிர்ந்து போனார். உடனே திருட்டு பற்றி கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் திருடிய நபர் பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்காததால் தாய் மஸ்கட் நாட்டிற்கு திரும்பி சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மார்ச் 16 ஆம் தேதி( 16.03.2026 ) மாணவி குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை அறிந்து போலீசாரே திடுக்கிட்டுப் போயினர். மாணவி குடியிருந்த வீட்டின் மேல்தளத்தில் மண்டைக்காடு புதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த 42 வயதான கால் டாக்சி ஒட்டுநர் ஜஸ்டாலீஸன் என்பவர் வசித்து வந்துள்ளார்.

மாணவியின் தாத்தா – பாட்டிக்கு தேவையான நேரத்தில் சில உதவிகளை செய்து தருவதாக வீட்டுக்குள் நுழைந்தவர், சிறுமியை தவறான நோக்கில் பார்த்துள்ளார். ஒரு முறை வீட்டில் குளித்துக் கொண்டிருந்த சிறுமியை செல்போனில் வீடியோ எடுத்த ஜஸ்டாலீஸன், அதை காட்டி நான் சொல்வதை செய்யவில்லை என்றால், வீடியோவை இணையத்தில் விட்டு விடுவேன் என மிரட்டத் தொடங்கினார்.

இதனால் பதறிப் போன சிறுமி தன்னை விட்டு விடுமாறு கெஞ்சியும், அவரை தனி இடத்திற்கு அழைத்துச் சென்றவர் குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். உறவு வைத்ததையும் வீடியோ எடுத்த ஜஸ்டாலீசன், மீண்டும் மீண்டும் அதனை சிறுமியிடம் காட்டி வலையில் வீழ்த்தியுள்ளார்.

இதனிடையே தனக்கு பணம் தேவை என கூறியவர், சிறுமியின் பாட்டி வீட்டில் வைத்திருந்த 5 சவரன் நகையை திருடி விட்டு, சம்பவம் பற்றி வெளியே சொல்லக்கூடாது என்றும் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இதற்கிடையே ஜஸ்டாலீசனின் கொடுமைகளை சமாளிக்க முடியாமல் சிறுமி தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கும் முயன்றதாக கூறப்படுகிறது.

இப்படியாக சுமார் 2 வருடத்திற்கு மேல் தன் வாழ்க்கையை சீரழித்தவனை எதிர்கொள்ள முடியாமல் பரிதவித்த சிறுமிக்கு, எதேச்சையாக அவரது செல்போனில் போக்சோ குற்றம் தொடர்பான விழிப்புணர்வு வீடியோ வந்துள்ளது. உடனே மனதில் தைரியத்தை வரவழைத்த சிறுமி, குளச்சல் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த ஜலஸ்டலீஸன், திருடிய நகையை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து உல்லாசமாக ஊர் சுற்றி வந்துள்ளார்.

இதையடுத்து குற்றவாளியின் செல்போனை டவர் லொக்கேஷன் மூலம் கண்காணித்ததில் குற்றவாளி சென்னை உள்ளிட்ட வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று கடைசியாக திருப்பத்தூரில் செட்டில் ஆனது தெரியவந்தது. உடனே விரைந்த குளச்சல் அனைத்து மகளிர் போலீஸார் திருப்பத்தூர் மேன்ஷனில் பதுங்கியிருந்த ஜஸ்டாலீஸனை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். நாகர்கோவில் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜஸ்டாலீஸன் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏற்கனவே குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஜஸ்டாலிஸனின் குற்ற பின்னணி குறித்து விசாரிக்காமல் சிறுமியின் குடும்பத்தார் வாடகைக்கு வீடு கொடுத்ததால் இதுபோன்ற சம்பவம் அரங்கேறிவிட்டதாக தெரிவிக்கும் போலீஸார் பொதுவாக வீடுகளை வாடகைக்கு விடுவோர் குடியேறும் நபர்களின் குற்ற பின்னணிகளை விசாரித்து விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Abi

https://makkalkavasam.com/

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *