சுற்றுசுவர் இடிந்து விழுந்து விபத்து – 10 பேர் பலியான துயரம்
பெங்களூரு அருகே மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 10 பேர் பலியான நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதுடன், ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சிவாஜி நகர் பகுதியில் உள்ள பவுரிங் லேடி கர்சன் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு அருகே இருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அந் நேரத்தில் லேசான மழை பெய்து கொண்டிருந்ததால் பாதசாரிகள் நடைபாதை கடையில் கட்டப்பட்ட தார்ப்பாயின் கீழ் நின்றிருந்தனர்.
அப்போது சுமார் 8 அடி உயர சுவர் இடிந்ததில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
இச்சம்பவம் பற்றி அறிந்த போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த துயர சம்பவம் குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்தார்.
மேலும் கர்நாடக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தார்.
