நடிகர் சூர்யா திறந்து வைத்த நவீன புற்றுநோய் சிகிச்சை மையம் – மதுரையில் புதிய மருத்துவ முன்னேற்றம்
நடிகர் சூர்யா திறந்து வைத்த நவீன புற்றுநோய் சிகிச்சை மையம்…
மதுரையில் புதிய மருத்துவ முன்னேற்றம்…

மதுரையில் அமைந்துள்ள மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை யில் நவீன ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது.
இந்த மையத்தை பிரபல தமிழ் திரைப்பட நடிகரும் சமூக சேவை ஆர்வலருமான சூர்யா திறந்து வைத்தார்.

இந்த தொடக்க விழாவில் டாக்டர் எஸ். குருசங்கர், திருமதி காமினி குருசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் புற்றுநோயியல் மற்றும் தொடர்புடைய துறைகளின் பல நிபுணர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து, உயர் தர சிகிச்சைகள் மற்றும் நீண்டகால பராமரிப்பை ஒரே இடத்தில் வழங்கும் நோக்கில் இந்த ஒருங்கிணைந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு கதிர்வீச்சு சிகிச்சை, மருந்து சிகிச்சை, அறுவைசிகிச்சை, குழந்தைகளுக்கான இரத்தப் புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
மேலும் கீமோதெரபி, இம்யூனோதெரபி, டார்கெட்டட் தெரபி, வலி நிவாரண சிகிச்சை ஆகியவை நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களால் வழங்கப்படுகின்றன. துல்லியமான சிகிச்சைக்காக ‘டோமோதெரபி’ போன்ற நவீன கதிர்வீச்சு தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின்றன. அதோடு ரோபோடிக் உதவியுடன் அறுவை சிகிச்சை வசதியும் இம்மையத்தில் இடம்பெற்றுள்ளது.

