காஞ்சிபுரத்தில் 3.0 திட்டத்திற்கு எதிராக ஆவண எழுத்தர்கள் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் 3.0 திட்டத்திற்கு எதிராக ஆவண எழுத்தர்கள் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் 3.0 திட்டத்திற்கு எதிராக ஆவண எழுத்தர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்!

காஞ்சிபுரம்: அரசு கொண்டுவர உள்ள 3.0 திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காஞ்சிபுரத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆவண எழுத்தர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுத்தர்கள் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு கொண்டுவர உள்ள 3.0 திட்டத்தில் காகிதமில்லா பதிவு, வருகையில்லா பதிவு மற்றும் இ-டெண்டர் முறைகளை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆவண எழுத்தர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஆவண எழுத்தர்கள் மட்டுமின்றி, இத்தொழிலை நம்பி வாழும் ஆவணத் தட்டச்சுப் பணியாளர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையைச் சார்ந்த ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கவலை தெரிவித்தனர்.
எனவே, அரசு கொண்டுவர உள்ள 3.0 திட்டத்தால் தங்களது தொழிலும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதைத் தடுக்க தமிழக அரசு தங்களது கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்தக் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நகரச் செயலாளர் பொற்பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் கோவிந்தபாபு மற்றும் ஆவண எழுத்தாளர்கள் கவியரசன், எஸ்.கே. ராமச்சந்திரன், மல்லிகா, ஜோதிட ராமன், மணிமேகலை, நிர்மலா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திட்டத்திற்கு எதிராக தங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
