காஞ்சிபுரத்தில் வாரியார் சுவாமிகள் குருபூஜை – லட்சம் மலர்களால் புஷ்பாஞ்சலி
காஞ்சிபுரத்தில் வாரியார் சுவாமிகள் குருபூஜை – லட்சம் மலர்களால் புஷ்பாஞ்சலி
காஞ்சிபுரத்தில் வாரியார் சுவாமிகளின் மகா குருபூஜை விழா: லட்சக்கணக்கான மலர்களால் புஷ்பாஞ்சலி!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் மகா குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் லட்சக்கணக்கான மலர்களால் பக்தர்கள் புஷ்பாஞ்சலி செலுத்தி வழிபட்டனர்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் திருவேகம்பன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கன்னியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், காலை திருமதி சண்முகப்பிரியா ராகவன் அவர்களின் தெய்வத் திருமுறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நிர்வாக அறங்காவலர் சுந்தரமூர்த்தி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை அறங்காவலர் செப்பேடு ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சென்னையைச் சேர்ந்த வோல்டெக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மு. உமாபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
உமாபதிக்கு அமுதசுரபி கௌரவப் பட்டம்

உமாபதி அவர்களின் திருப்பணிகள், கல்வி உதவித்தொகை வழங்குதல் மற்றும் சமுதாயத் தொண்டுகளைப் பாராட்டி அவருக்கு ‘அமுதசுரபி’ என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்டது.
திருக்கோயில் திருப்பணியாளர்களுக்கு வாரியார் விருது
தொடர்ந்து கச்சபேஸ்வரர் திருக்கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேக விழாவில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட சிவகுரு, பெருமாள், ஆறுமுகம், சுப்பராயன், சிற்றம்பலம், தாமோதரன், ஜீவரத்தினம், ஆசிரியர் ரவி, ரவி சில்க்ஸ் டி. ரவி, கங்காதரன், குமரவேல், வடிவேல், வெங்கடேசன் உள்ளிட்டோருக்கு சிறப்பு விருந்தினர் மு. உமாபதி திருக்கரங்களால் வாரியார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
லட்சக்கணக்கான மலர்களால் புஷ்பாஞ்சலி

விழாவின் முக்கிய நிகழ்வாக, நிர்வாக அறங்காவலர் சுந்தரமூர்த்தி தலைமையில் பக்தர்கள் தங்கள் திருக்கரங்களால் லட்சக்கணக்கான மலர்களைச் சமர்ப்பித்து திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அன்னதானக் குழுவினர் சார்பில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானத்தில் பங்கேற்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் குருபூஜை அன்னதான அறக்கட்டளையினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

