காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தியாகராஜ ஆராதனை – சிறப்பு கச்சேரி
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தியாகராஜ ஆராதனை: சிறப்பு கச்சேரி

பஞ்சரத்ன கீர்த்தனைகள் இசை நிகழ்ச்சியில் பக்தி பரவசம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் ஆலயத்தில் தியாகராஜ ஆராதனை தினத்தை முன்னிட்டு சிறப்பு இசைக் கச்சேரி விமரிசையாக நடைபெற்றது.
புஷ்ய பஹுல பஞ்சமி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில், தியாகராஜ சுவாமிகள் இயற்றிய புகழ்பெற்ற கன ராக பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடப்பட்டன.
பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி
அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் கண்ணாடி அறை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், யாமினி ரமேஷ், அனுஷா ஸ்ரீராம், ஹரிஶ்ருதா, திருமதி பத்மப்ரியா உள்ளிட்டோர் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடினர்.
அவர்களுக்கு இசைத் துணையாக ஹிரமயீ ஸ்ரீராம் வயலின் வாசித்தார். தயாஸ்ரீ வீணை இசைத்தார். ராஜேஷ் மிருதங்கம் வாசித்தார். இதனுடன் பல்வேறு சங்கீத வித்வான்கள் மற்றும் விதூஷிகள் கலந்து கொண்டு இசை அஞ்சலி செலுத்தினர்.
பக்தர்களை கவர்ந்த இசை நிகழ்ச்சி
பெருமாள் சன்னதி அருகே பாரம்பரிய கர்நாடக இசையில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் இசைக்கப்பட்டதால், ஆலய வளாகத்தில் பக்தி நிறைந்த சூழல் நிலவியது. இசை ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை ரசித்தனர்.
இசைக் கலைஞர்களுக்கு கௌரவம்
நிகழ்ச்சியில் பங்கேற்ற இசைக் கலைஞர்கள் மற்றும் வித்வான்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், அருள்மிகு வரதராஜப் பெருமாளின் புகைப்படமும் வழங்கப்பட்டது.
தியாகராஜ சுவாமிகளின் இசைப் பாரம்பரியத்தை போற்றும் வகையில் நடைபெற்ற இந்த ஆராதனை நிகழ்ச்சி காஞ்சிபுரம் பக்தர்கள் மற்றும் இசை ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

