விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி – ராமநாதபுரம் வருகை
கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள், பொதுமக்கள் முதலமைச்சர் வெற்றி கோப்பை பரிசு பெற முன்வர வேண்டும் என இருசக்கர வாகனத்தில் 1200 கிலோமீட்டர் பயணம் செய்த பெண் ராமநாதபுரத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளலாம், இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 37 கோடி ரூபாய் வரை பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என ஐந்து பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு வெற்றி பெற்று பரிசுகளை பெற்று செல்லலாம்.

இந்த விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை சென்னையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 15 அன்று சென்னையில் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து விழுப்புரம், திருச்சி, காரைக்குடி வழியாக ராமநாதபுரம் வந்தனர்.
ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் அனைவரையும் வரவேற்றார். இதனைத்தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவர்களிடம் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் குறித்து குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய குழுவின் ஒருங்கிணைப்பாளர் நிவேதா இதனை தெரிவித்தார்.
“தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை பெறுவதற்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள மிகவும் திறமையான விளையாட்டு வீரர்கள் மற்றும் வாய்ப்பு இருந்தும் கலந்து கொள்ள முடியாத நிலையில் உள்ள ஏராளமான மாணவர்கள் பொதுமக்கள் அரசு ஊழியர்கள் மாற்றுத்திறனாளிகள் இவர்களைக் கண்டறிந்து வெளி உலகத்திற்கு கொண்டு வந்து அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.”
“அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோம், தற்போது ராமநாதபுரம் விளையாட்டு விடுதி மாணவர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளதாம், அதனை தொடர்ந்து ராமேஸ்வரம், தனுஷ்கோடி சென்று அங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்கள் மத்தியில் பேச உள்ளோம் மேலும் தமிழகம் முழுவதும் 1200 கிலோமீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டு முதல் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோம்” என தெரிவித்தார்.
இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன்தங்கம், மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கே.ஜே. பிரவீன், நகராட்சி உறுப்பினரும் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளருமான முகமது ஜஹாங்கீர், துணை அமைப்பாளர் அசாருதீன், மண்டபம் மேற்கு ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சங்கர், மாவட்ட பிரதிநிதி கார்மேகம், சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

