சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 21kg கஞ்சா: மதுவிலக்கு அமலாக்க போலீசார் நடவடிக்கை – இருவர் கைது
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து சாலை மார்க்கமாக சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலையடுத்து செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகரில் உள்ள சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காவலர்களை கண்டு நிற்காமல் இருவர் வேகமாக செல்வதை கண்டு அவர்களை மடக்கி பிடித்து சோதனையிட்ட போது, அவர்களது பையில் கஞ்சா இருப்பது உறுதியானது. இதையடுத்து செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் சென்னை ஓட்டேரியை சேர்ந்த அழகர் சாமி (27), அம்பத்தூரை சேர்ந்த பாரதி (25) என்பது தெரிய வந்தது.
ஆந்திராவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்து அங்கிருந்து பேருந்தில் சென்னைக்கு கடத்தி வந்ததும், சிறுசிறு பொட்டலங்களாக மாற்றி விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அதனை கடத்தி வந்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

