தூத்துக்குடியில் புதிய விமான நிலையம்: ஜூலை 26ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
தூத்துக்குடி புதிய விமான நிலையத்தை வரும் 26 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

தூத்துக்குடி வாகைகுளம் பகுதியில் கடந்த 1992 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இரண்டு தனியார் விமான நிறுவனங்கள் மூலம் சென்னை மற்றும் பெங்களூருவுக்கு 9 விமான சேவைகள் அளிக்கப்படுகின்றன. இதனை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு சுமார் ரூ.452 கோடி செலவில் வருகிற 2044 ஆம் ஆண்டு வரை சிறப்பாக செயல்பட தக்க வகையில் விரிவாக்க பணிகள் மேற்காள்ளப்பட்டன. இதில் 1,350 மீட்டர் விமான ஓடுதளம் 3 ஆயிரத்து 115 மீட்டர் நீள ஓடுதளமாக மாறப்பட்டு உள்ளது.
இதில் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வகையிலும், பல்வேறு வசதிகளுடனும் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் மிகப்பெரிய ஏ-321 ரக ஏர்பஸ் விமானங்களும் தூத்துக்குடிக்கு வந்து செல்ல முடியும். இதனால் தூத்துக்குடி சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இரவு 7 மணி அளவில் வரும் பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் கலந்து கொண்டு, புதிய விமான நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 10,000 பேர் கலந்து கொள்வதற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

பாரதப் பிரதமர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் பிரதமரின் பாதுகாப்பு படை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
விமான நிலையத்தில் விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் பின்னர் விழா முடிந்த பின்பு தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் இரவு திருச்சி செல்கிறார்.

