நீதிகேட்டு போராட அனுமதி மறுப்பதா? – ‘தவெக’ திடீர் முடிவு!
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தை நாட தமிழக வெற்றிக் கழகத்தினர் முடிவெடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் வழக்கை நீதிமன்ற நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த நான்காண்டுகளில் தமிழகத்தில் நடந்த விசாரணை மரணங்கள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னையில் 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதற்கு அனுமதி அளிக்க வேண்டுமென்று காவல்துறைக்கு கடிதம் கொடுத்திருந்தனர். முதலில் கடந்த 3ஆம் தேதி இராஜரத்தினம் மைதானம் அருகே நடத்த அனுமதி கேட்டிருந்தனர். அந்த தேதியில் இடம் இல்லை என்று காவல்துறை கூறி வேறு தேதி கொடுக்குமாறு கேட்டு இருந்தனர்.
இந்த நிலையில் வரும் 6ஆம் தேதி சிவானந்தா சாலையில் நடத்த அனுமதி கேட்டனர். ஆனால் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. இதனால் காவல்துறைக்கு அனுமதி வழங்க உத்தரவிட கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

