முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மகளிருக்கு திருநெல்வேலி அல்வா கிண்டிக்கொடுக்கிறார் – முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
தமிழக முதலமைச்சர், அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் தருவதாக ஏமாற்றிவிட்டு திருநெல்வேலி அல்வாவை கிண்டிக்கொடுப்பதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விமர்சித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் உள்ள வார்டு செயலாளர்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்புகளை பல ஆண்டுகளாக முன்னாள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பரிசுத்த வகுப்புகளை மருத்துவமனை சாலையில் உள்ள அவரது திருமண மஹாலில் வைத்து அனைவருக்கும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசுகையில், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முதல்வர் ஆயிரம் ரூபாய் உரிமைதொகை தருவதாக ஏமாற்றி வருகிறார்”.
“பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் என்று அறிவித்துவிட்டு பாதி பெண்களுக்கு தான் கொடுத்துள்ளார், மீதம் உள்ள பெண்களுக்கு திருநெல்வேலி அல்வாவை சுடச்சுட கிண்டி கொடுப்பதாக” திரைப்பட பாணியில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

