திருவள்ளூர்: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கும்மிடிப்பூண்டி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பான சூழல் நிலவியது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற 8 வயது சிறுமியை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுமிக்கு கொடுமை நடந்து 10 நாட்கள் ஆகியும் இன்னும் குற்றவாளியை கண்டுபிடிக்காத நிலையில் குற்றவாளி குறித்த தகவல் தெரிந்தால் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளிக்குமாறு மாவட்ட காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த நிலையில் ஆரம்பாக்கத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நேரங்களில் மாணவிகளுக்கு காவல்துறையினர் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதனிடையே ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கட்சி நிர்வாகிகளுடன் வருகை தந்த பாமக பொருளாளர் திலகபாமா காவல்துறை நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். குற்றவாளியை உடனே கைது செய்திட வேண்டும் என அப்போது அவர் கேட்டு கொண்டார்.

