கவின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கே டி சி நகர் பகுதியில் கடந்த 27ஆம் தேதி IT ஊழியரான கவின் என்பவர் காதல் விவகாரத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும்பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இருந்தது.
இதைதொடர்ந்து, “குற்றவாளியின் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை பெற்றுக் கொள்வோம்” என்று ஐந்து நாட்கள் தொடர்ந்து உடலை பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன் பிறகு உடலைப் பெற்றுக் கொண்டு தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவரது தந்தை சந்திரசேகரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் தெரிவித்து வந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் 24 மணி நேரமும் கவின் தந்தை சந்திரசேகருடன் இருப்பார்.

