ராமநாதபுரத்தில் முளைப்பாரி திருவிழா
உலக நன்மை வேண்டியும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி வழுதூர் பகுதியில் ஏராளமான ஆண்கள், பெண்கள் முளைப்பாரிகள் தலையில் சுமந்து ஊர்வலம்.

ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ளது வழுதூர் கிராமம் இந்த பகுதியில் உலக நன்மை வேண்டியும் நல்ல மழை பெய்து கிராமப் பகுதிகளில் விவசாயம் செழிக்கவும் ஸ்ரீ மாரியம்மனை கடந்த பத்து நாட்களாக வழிபட்டு முளைக் கொட்டு உற்சவ விழா நடைபெற்றது.
கடந்த 27 ஆம் தேதி காப்பு கட்டுதளுடன் விழா துவங்கியது, ஞாயிறு, திங்கட்கிழமை முத்து எடுத்தல், செவ்வாய்க்கிழமை முத்து பரப்புதல் என திருவிழா நடைபெற்று அதன் பின்பு இரவு ஒரு வார காலம் ஒயிலாட்டம், கும்மியாட்டம் என ஆடிப்பாடி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

கிராமங்களில் உள்ள இயற்கை தெய்வங்களை வழிபாடு செய்து நல்ல மழை பெய்து இயற்கை வளம் செழிக்கவும் நெல், கடலை உள்ளிட்ட இயற்கை பொருட்கள் விளைவிக்க நல்ல மழை தொடர்ச்சியாக பெய்து மக்களின் வளர்ச்சிக்கு இறைவன் உதவ வேண்டும் என ஒவ்வொருவரும் நேர்த்திக்கடன் வைத்து முளைப்பாரிகளை அம்மன் ஆலயத்தில் வைத்து வழிபாடு செய்த பின்பு வழுதூர் மாரியம்மன் ஆலயத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை கரகம் எடுத்து புதன் கிழமை முளைப்பாரிகளை ஆண்கள் பெண்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்ட பாரிகளை தலையில் சுமந்து ஊர்வலம் வந்து வழுதூர் பெரிய ஊரணி பகுதியில் கரைத்தனர்.
முளைக்கொட்டு விழாவை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது, அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தமிழகத்தின் புகழ் பெற்ற கிராமிய பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் வழுதூர், தெற்கு காட்டூர், உடைச்சியார் வலசை, வாலாந்தரவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதே போல வாலாந்தரவை வாழ வந்த அம்மன் ஆலயத்தில் இருந்து கரகம் எடுத்து ஏராளமானவர்கள் பாரிகளை தலையில் சுமந்து வாலாந்தரவை மாரியம்மன் ஆலயத்தில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மொட்டையன் வலசை, படவெட்டி வலசை உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 108 இடங்களில் ஒரே நாளில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

