“விஜய் கட்சியில் கட்டுப்பாடு இல்லை, கண்ணியம் இல்லை” – அமைச்சர் கீதா ஜீவன்
 
					விஜய் கட்சியில் கட்டுப்பாடு இல்லை, கண்ணியம் இல்லை. தலைமை கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும் வரையறை இல்லாமல் இருக்கிறது என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சாலையில் உள்ள திமுக வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் வைத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய மூன்று சட்டமன்றத்தில் உள்ள 830 பூத்-களில் ‘தமிழ்நாட்டை தலைகுனியே விடமாட்டோம்’ என்ற முன்னெடுப்பின் மூலம் உறுதிமொழி எடுக்க உள்ளோம். கரூரில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. ஆகவே, 2026இல் தமிழக முதல்வரை மீண்டும் முதல்வராக வெற்றி பெற வைக்கும் முப்பெரும் விழாவாக அது அமையும்.”
“பாஜக, அதிமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துப் பார்க்க வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதிகளில் கூறாததை கூட செய்து வருகின்றோம். திமுக 80 சதவீதத்திற்கும் மேலாக வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக அரசை குறை கூற வேண்டும் என்பதற்காக குற்றம் சாற்றுவார்கள்.”
“பல்வேறு திட்டத்தின் மூலம் தொழில், பொருளாதாரம் வளர்ச்சி பெற்றுள்ளது. ஏழை, எளிய மக்கள் பயன் பெற்று நலன் அடைந்து வருகின்றார்கள். நிச்சயமாக மக்கள் ஆதரவோடு திராவிட முன்னேற்றக் கழகம் 2026இல் ஆட்சி பொறுப்பு ஏற்கும். திமுக-விற்கு எதிராக எத்தனை எதிர்க்கட்சிகள் இருந்தாலும் நாங்கள்தான் உறுதியாக வெற்றி பெறுவோம்.”
“விஜய் கட்சியில் கட்டுப்பாடு இல்லை கண்ணியம் இல்லை. தலைமை கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும் வரையறை இல்லாமல் இருக்கிறது. விரைவில் அவர்கள் கற்று கொள்வார்கள்” என்றார்.


 
			 
			 
			 
			 
			