வல்லக்கோட்டை கோவில் குடமுழுக்கு விவகாரம்: மதுரையில் காங்கிரசார் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம்
வல்லக்கோட்டை கோவில் குடமுழுக்கு விவகாரம்: மதுரையில் காங்கிரசார் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம்
மாநில காங்கிரஸ் தலைவருக்கு கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் அனுமதி மறுப்பு: மதுரையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
மதுரை: மாநில காங்கிரஸ் தலைவரை கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி மறுத்ததாகக் கூறி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிப்பாளையத்தில் ஆர்ப்பாட்டம்

மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி மற்றும் வார்டு தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
அனுமதி மறுத்ததாக குற்றச்சாட்டு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழாவில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கட்சியினர் குற்றம்சாட்டினர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிக்கை
கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி மறுத்ததாகக் கூறப்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற பாகுபாடான செயல்கள் இனிமேல் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரசார் வலியுறுத்தினர்.
மேலும், சமூக சமத்துவத்திற்கு எதிரான எந்தவிதமான நடவடிக்கைகளையும் அனுமதிக்கக் கூடாது எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பு
இந்த ஆர்ப்பாட்டத்தில் தல்லாகுளம் முருகன், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் சானவாஸ் பேகம், நளினி, ஹேமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், பகுதி தலைவர்கள், வார்டு தலைவர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியை ஒட்டி எழுந்துள்ள இந்த விவகாரத்தில், தங்களது கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் மதுரை மாநகர் காங்கிரஸ் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
