உஸ்பெகிஸ்தான் மாஸ்டர்ஸ் கோப்பை – பிரக்ஞானந்தா சாம்பியன்!

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற உஸ்செஸ் மாஸ்டர்ஸ் கோப்பை போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் நடைபெற்றது. இந்தியாவின் ‘நம்பர்-1’ வீரர் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.
இதன் கடைசி சுற்றுப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் நோடிர்பெக் அப்துஸட்டோரோவ்வை, பிரக்ஞானந்தா வீழ்த்தினார். இந்தநிலையில், உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக்-ஐ வீழ்த்தி கோப்பையை வென்றார், தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா.
உஸ்பெகிஸ்தான் செஸ் கோப்பை 2 சுற்றுகளாக நடைபெற்ற டைபிரேக்கரில் 1.5 புள்ளிகளை பெற்று பிரக்ஞானந்தா பட்டம் வென்று அசத்தியுள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு பரிசுத்தொகையாக ரூ.17லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றியை தொடர்ந்து, உலக செஸ் தர வரிசைப் பட்டியலில் பிரக்ஞானந்தா 4வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இப்பட்டியலில், மேக்னஸ் கார்ல்சன் முதலிடத்திலும், ஹிகாரு நகமுரா, பேபியானோ கரவுனா ஆகியோர் 2 மற்றும் 3வது இடங்களிலும் உள்ளனர்.
உலக செஸ் தரவரிசையில் குகேஷை முந்தினார் பிரக்ஞானந்தா(2778.3), 5வது இடம் – குகேஷ்(2776.6). வரலாற்றில் முதல் முறையாக உலக செஸ் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் 2 தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர்.