கும்பகோணத்தில் நீதி பிச்சை கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: போலீசார் கைது செய்ததால் பரபரப்பு
கும்பகோணத்தில், காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் நீதி பிச்சை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகளை போலீசார் கைது செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி கிராமத்தில் அமைந்துள்ள திருஆருரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு ரூ.400 கோடி நிலுவைத் தொகை வழங்காமல் உள்ளது.
விவசாயிகள் பெயரில் சர்க்கரை ஆலை வாங்கிய கடன் காரணமாக கரும்பு விவசாயிகள் சிபில் ஸ்கோர் பிரச்சனையில் சிக்கி உள்ளனர்.
எனவே இந்தத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், கரும்பு விவசாயிகள் கடன்களை ரத்து செய்ய வேண்டும் திருஆருரான் சர்க்கரை ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து திருஆருரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் ஆயிரம் நாட்களாக போராடி வருகின்றனர்.

ஆயிரம் நாட்கள் கடந்த பிறகும் தங்களுக்கு தீர்வு கிடைக்காததால், பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் கும்பகோணம் நீதிமன்றம் முன்பு நீதி பிச்சை கேட்கும் போராட்டம் என்ற பெயரில் போராட்டம் நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தனர்.
இதற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், நீதிமன்றம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கினர். இந்நிலையில் அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தடையை மீறி நீதி பிச்சை கேட்கும் போராட்டத்தில் கரும்பு விவசாயிகள் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது காவல்துறையினருக்கும் கரும்பு விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளின் ஒரு பிரிவினர் நீதிமன்றம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது கரும்பு விவசாயிகள் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கரும்பு விவசாயிகள் பிரச்சனையை நீதிமன்றம் விரைந்து வழக்கு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர்.
கரும்பு விவசாயிகள் போராட்டம் காரணமாக கும்பகோணம் நீதிமன்றம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவியது.

