வாக்குச் சாவடிக்கே வந்து வாக்களித்த 102 வயது மூதாட்டி!

புதுப்பேடு கிராமத்தை சேர்ந்த 102 வயது மூதாட்டி, வாக்குச்சாவடிக்கு நேரடியாக வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் புதுமண தம்பதியினர், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரடியாக வந்து தங்களது வாக்கை செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் புதுப்பேடு கிராமத்தை சேர்ந்த 102 வயது மூதாட்டி ஈஸ்வரி வாக்குச்சாவடிக்கு நேரடியாக வருகை தந்தார்.
உறவினர்கள் உதவியுடன் ஆட்டோவில் வாக்குச்சாவடிக்கு வந்து சேர்ந்த மூதாட்டி ஈஸ்வரி, மூன்று சக்கர நாற்காலி உதவியுடன் வாக்குச்சாவடி மையத்திற்குள் சென்று தனது வாக்கை செலுத்தினார். எப்போதுமே தனது கணவருடன் முதல் ஆளாக வந்து வாக்கு செலுத்துவது வாடிக்கையாக இருந்ததாக மூதாட்டி ஈஸ்வரி மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தார்.

