புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் சென்னையில் இன்று முதல் இயக்கம்

புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் சென்னையில் இன்று முதல் இயக்கம்

ரூ.47.50 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட வியாசர்பாடி மின்சாரப் பேருந்து பணிமனையை திறந்து வைத்து, ரூ.207.90 கோடி மதிப்பிலான 120 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை, வியாசர்பாடியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்துத் துறை சார்பில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் ரூ.47.50 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட வியாசர்பாடி மின்சாரப் பேருந்து பணிமனையை திறந்து வைத்தார்.

சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக ரூ.207.90 மதிப்பிலான 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த மின்சார பேருந்தின் படிக்கட்டு உயரம் தரையில் இருந்து 400 மி.மீ. வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், மின்சாரப் பேருந்துகளில் Kneeling தொழில் நுட்ப வசதி உள்ளதால், மேலும் 250 மி.மீ. பேருந்தின் தரைத் தளத்தை கீழே இறக்கி மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பேருந்துகளில் எளிதாக ஏறி, இறங்க வசதி செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் மின்சாரப் பேருந்துகளில் எளிதாக அமரக்கூடிய வகையில் இருக்கைகள் சமதள உயரத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

இப்பேருந்துகளில் இருக்கைகளின் பக்கவாட்டு இடைவெளி 650 மி.மீ.-க்கு பதிலாக 700 மி.மீ. அகலம் உள்ளதால், நின்று செல்லும் பயணிகளுக்கு எளிதாக இருப்பதோடு, மின்சாரப் பேருந்துகளில், இரண்டு கேமராக்கள் முன் பகுதியிலும், ஒரு கேமரா பின்புறமும் பொருத்தப்பட்டுள்ளதால் மகளிருக்கு பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படுகிறது.

120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்கள்

வழித்தட எண் 2B

கவியரசு கண்ணதாசன் நகர் முதல் எம்.கே.பி. நகர் – சத்தியமூர்த்தி நகர் – வள்ளலார் நகர் – யானைகவுனி, சென்னை சென்ட்ரல் – பல்லவன் சாலை – மன்றோ சிலை – போர் நினைவு சின்னம் – அண்ணா சதுக்கம் வழியாக கவியரசு கண்ணதாசன் நகர் வரை (சுற்றுப் பேருந்து) 10 பேருந்துகள்;

வழித்தட எண் C33

கவியரசு கண்ணதாசன் நகர் – கடற்கரை ரயில் நிலையம் – பிராட்வே – நேரு விளையாட்டு அரங்கம்- புளியந்தோப்பு – மூலக்கடை – வியாசர்பாடி வழியாக கவியரசு கண்ணதாசன் நகர் வரை (சுற்றுப் பேருந்து) 5 பேருந்துகள்;

வழித்தட எண் C64

கவியரசு கண்ணதாசன் நகர் முதல் வியாசர்பாடி – சர்மா நகர் – ஜமாலியா – வள்ளலார் நகர் – எம்.கே.பி நகர் வழியாக கவியரசு கண்ணதாசன் நகர் வரை (சுற்றுப் பேருந்து) 5 பேருந்துகள்;

வழித்தட எண் 18A

பிராட்வே முதல் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் – கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை 20 பேருந்துகள், வழித்தட எண் 37 – வள்ளலார் நகர் முதல் பூவிருந்தவல்லி வரை 10 பேருந்துகள்,

வழித்தட எண் 46G

மகாகவி பாரதியார் (MKB) நகர் முதல் எம்.ஜி.ஆர். கோயம்பேடு பேருந்து நிலையம் வரை 10 பேருந்துகள்,

வழித்தட எண் 57

வள்ளலார் நகர் முதல் செங்குன்றம் வரை 10 பேருந்துகள்,

வழித்தட எண் 57X

வள்ளலார் நகர் முதல் பெரியபாளையம் வரை 10 பேருந்துகள்,

வழித்தட எண் 164E

பெரம்பூர் முதல் மணலி வரை 10 பேருந்துகள்,

வழித்தட எண் 170TX

மகாகவி பாரதியார் (MKB) நகர் முதல் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் – கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை 20 பேருந்துகள்,

வழித்தட எண் 170C

திரு.வி.க. நகர் முதல் கிண்டி திரு.வி.க. எஸ்டேட் வரை 10 பேருந்துகள் என மொத்தம் 120 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *