2026 தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது! – திண்டுக்கல்லில் கிருஷ்ணசாமி பேட்டி

2026 தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது; ஆட்சியில் பங்கு வழங்கும் கட்சி தான் ஆட்சியைப் பிடிக்கும் – திண்டுக்கல்லில் கிருஷ்ணசாமி பேட்டி.
திண்டுக்கல்லில் புதிய தமிழக கட்சி தலைவர் Dr. கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “புதிய தமிழக கட்சியின் ஏழாவது மாநில மாநாடு மதுரையில் வரும் 2026 ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும்.”
“தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறந்து பொதுமக்களை மதுவுக்கு அடிமையாக்கி அவர்களது உடல்களையும் கெடுத்து குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அவர்கள் சம்பாதிக்கும் பணத்தையும் அரசு பிடுங்கிக் கொண்டு அவர்கள் குடும்பம் குழந்தைகளை காப்பாற்ற முடியாமல் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். அதேபோல் 70 வயது 80 வயது இருக்க வேண்டியவர்கள் தற்போது 40 வயது 45 வயதில் மதுவால் உயிரிழந்து வருகின்றனர். எங்களது மாநாட்டில் மதுவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவோம்.”
“மேலும் கிராமப்புற மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் தமிழக அரசு செய்து தரவில்லை பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்த போது தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமப் பகுதிகளில் குடிநீர் கூட மக்கள் விலை கொடுத்து வாங்கும் அவல நிலை உள்ளது. குழாய் உள்ளது தண்ணீர் இல்லை.”
“மேலும் இலவச வீட்டு மனை பட்டா 3 சென்ட் இடம் பொது மக்களுக்கு வழங்கப்படாததால் ஒரு சென்டில் மூன்று குடும்பங்கள் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளது. மக்களைப் பற்றி கவலைப்படாத ஒரு அரசு தான் இங்கு உள்ளது. கண்டிப்பாக 2026 இல் அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.”
“அதேபோல் கோவை முதல் திருச்சி வரை தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் லாரிகள் செல்கிறது. மணல் அள்ளுவதற்கு எந்த அனுமதியும் இல்லாத நிலையில் காவிரி ஆற்றுப்படுகையில் இருந்து தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. கரூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மண் கொள்ளை நடைபெற்று வருகிறது.”
“அதிகாரிகள் அரசியல்வாதிகள் இணைந்து மண் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியில் பங்கு வழங்கும் கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைப்போம். கண்டிப்பாக எந்த கட்சியும் 60 சீட்டுக்கு மேல் 2026 தேர்தலில் பெற மாட்டார்கள். ஆகவே, கண்டிப்பாக கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வழங்கும் சூழ்நிலை ஏற்படும்.”
“புதிய தமிழகம் கட்சியின் கூட்டணி என்பது ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் மதுரை மாநாட்டில் தான் அறிவிக்கப்படும். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் திருமாவளவன் திமுகவிற்கு புரோக்கர்களாகவே மாறி உள்ளார். ”
“பொறியாளர் கவின் கொலை செய்யப்பட்டது ஆணவக் கொலை. அதற்கு இரு சமுதாயத்தினரிடம் விழிப்புணர்வு அவசியம், அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னிறுத்தி நடத்தி வரும் நிலையில் அந்தப் போராட்டத்தை நிறுத்தும் வகையில் திருமாவளவன் கவினின் தந்தை மற்றும் உறவினர்களை தமிழக முதல்வரை சந்திக்க அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.”
“இது எந்த அளவுக்கு சாத்தியம். பொறியாளர் கவின் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் கூட தெரிவிக்காதவர் தமிழக முதல்வர், அப்படி இருக்கும் சூழ்நிலையில் திருமாவளவன் இது போன்று தொடர்ந்து 2009 இல் இருந்து புரோக்கர் வேலை செய்து வருகிறார். அவரது சமுதாய மக்களையே அவரால் காப்பாற்ற முடியவில்லை, வேறு சமுதாய மக்களை எதற்காக வஞ்சிக்கிறார். இவருக்கு அதிக சீட்டு வேண்டுமென்றால் வேறு தொழிலுக்கு செல்லலாம்.”
“கள்ளுக்கடை திறப்பதை ஆதரிக்கவில்லை என்றும், மதுவை ஒழிப்போம் என்று சொல்லிவிட்டு கள்ளுக்கடையை திறந்தால் கள்ளும் போதை தருவது தான். இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். பனை மரத்திலிருந்தும் தென்னை மரத்திலிருந்தும் பல்வேறு உபகரணங்களும் மக்களுக்கு தேவையான பல்வேறு பொருட்களும் கிடைக்கும் சூழ்நிலையில் மக்களை பாதிக்கும் மதுபானமான கள்ளுக்கடை மட்டும் எதற்காக திறக்க வேண்டும்” என பேசினார்.