வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தல்
தமிழகத்தில் வழக்கறிஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதையும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக மத்திய மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் என கூறி திண்டுக்கல் மாவட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பான சூழல் நிலவியது.

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, தமிழகத்தில் வழக்கறிஞர்கள் தொடர்ந்து பார்க்கப்படுவதையும் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக மத்திய மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில். திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் குமரேசன். செயலாளர் செல்வராஜ், பொருளாளர் காயத்ரி, நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் குமரேசன் பேசுகையில், தமிழகத்தில் தற்பொழுது வழக்கறிஞர்கள் தொழில் செய்வதில் பல்வேறு இடர்பாடுகள் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும், சுதந்திரமாக வழக்கறிஞர் தொழில் செய்ய முடியாமல் இரண்டு நாட்களுக்கு முன்பு நீதிமன்ற பணிக்காக சர்வே செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர் முருகானந்தம் மற்றும் தாம்பரம் வழக்கறிஞர் ரகுராமன் மீதும் கொலைவெறி தாக்குதல் நடைபெற்றதில் முருகானந்தம் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் என்றும் குறிப்பிட்டார்.
ரகுராமன் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக மாதம் ஒரு வழக்கறிஞர் என படுகொலை செய்யப்பட்டு வருவதை திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய குமரேசன், இதற்காக மத்திய அரசையும் மாநில அரசையும் உடனடியாக வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும், இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் இன்று வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் தொடருமானால் விரைவில் ஜாக் தலைமையில் முடிவெடுக்கப்பட்டு அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாக செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

