பின் வாசல் வழியாக தப்பிச் சென்ற நிகிதா!
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறையிடம் புகார் அளித்த பேராசிரியர் நிகிதா கல்லூரி பணிக்கு திரும்பினார். செய்தியாளர்கள் காத்திருப்பதை அறிந்த நிகிதா கல்லூரி பின் வாசல் வழியாக தப்பிச் சென்றார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் தனது காரில் இருந்து நகை திருடியதாக பேராசிரியர் நிகிதா திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் காவலாளி அஜித் குமார் கொலை செய்யப்பட்டார்.
காவலாளி கொலை வழக்கில் அவரை விசாரணை செய்த 5 காவலர்கள் தற்பொழுது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காரில் இருந்த நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த பேராசிரியர் நிகிதா திண்டுக்கல் எம் வி எம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் தாவரவியல் துறை தலைவராக இருந்தார்.

கடந்த பத்து தினங்களாக விடுமுறையில் சென்ற நிகிதா, விடுமுறை முடிந்து இன்று (07.07.25) காலை வழக்கம் போல் கல்லூரிக்கு வருகை தந்தார்.
பின்னர் தனது அன்றாட பணிகளை செய்து வந்த நிகிதா வகுப்பறைக்கு சென்று மாணவிகளுக்கு பாடம் நடத்தி வந்தார். இந்நிலையில் அவரிடம் பேட்டி காண்பதற்காக செய்தியாளர்கள் கல்லூரி வாசல் முன்பு காத்திருந்தனர்.
இதனை அறிந்த நிகிதா கல்லூரியின் பின் பக்கம் உள்ள சுற்றுச்சுவர் இடிந்திருந்த பகுதி வழியாக தனது காரில் வேகமாக தப்பிச் சென்றார்.

