வடகிழக்கு பருவமழைக்கு முன் நிரம்பிய ‘தாமல் ஏரி’: ‘கலங்கல்’ வழியாக வெளியேறி வரும் 450 கன அடி உபரி நீர்!
 
					வடகிழக்கு பருவமழைக்கு முன்பே நிரம்பிய தாமல் ஏரியை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு, கலங்கல் வழியாக வெளியேறி வரும் 450 கன அடி உபரி நீரை மலர் தூவி வரவேற்றார்.

காஞ்சிபுரம் அருகே உள்ள தாமலில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது 611 ஏக்கர் பரப்பளவு உடைய தாமல் ஏரி. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று இவ் ஏரியானது 206 மில்லியன் கன அடி கொள்ளளவு உடையது.
இதில் 10 மதகுகள், 3 கலங்கல்கள் உள்ளன. இந்த ஏரி வாயிலாக, 2,319 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழைக்கு முன்னதாகவே இந்த ஏரியானது தனது முழு கொள்ளளவை எட்டி முழுவதும் நிரம்பியுள்ளதால்,சில நாட்களாக கலங்கல் வழியாக உபரிநீரானது வெளியேறி வருகிறது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, ஏரியிலிருந்து கலங்கல் வழியாக 450 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்ற நிலையில், உபரிநீர் வெளியேறுவதை,கைத்தறி துறை மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், எம்.எல்.ஏ சிவிஎம்பி எழிலரசன், காஞ்சிபுரம் ஒன்றியக் குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார், மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் நித்யா சுகுமார் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளுடன் இணைந்து தாமல் ஏரியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு ஏரி குறித்த விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் ஏரியில் இருந்து வெளியேறி வரும் உபரி நீரினை அமைச்சர் ஆர்.காந்தி மலர் தூவி வரவேற்றார். அமைச்சரின் ஆய்வின் போது நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மார்கண்டேயன் உள்ளிட்ட துறைச் சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
 
 
 
 


 
			 
			 
			 
			 
			