லஞ்சம் கேட்கும் வாலாஜாபாத் பத்திரம் பதிவு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு
அரசு வழிகாட்டி நில மதிப்பீட்டுக்கு பணம் செலுத்தியும் பத்திரப்பதிவு செய்து தராமல், லஞ்சம் கேட்கும் வாலாஜாபாத் பத்திரம் பதிவு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமா ரஞ்சித்குமார், இவரது கணவர் ஆர் வி ரஞ்சித் குமார், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அணியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.
இந்நிலையில் பிரேமா ராஜ்குமார் மற்றும் அவரது கணவர் ஆர்வி ரஞ்சித் குமார் ஆகியோர் இணைந்து முத்தியால் பேட்டை அடுத்த வள்ளுவப்பாக்கம் கிராமத்தில் உள்ள காலி நிலத்தை 6 கோடி ரூபாய்க்கு வாங்கி பத்திரப்பதிவு செய்ய வாலாஜாபாத் பத்திர பதிவு அலுவலகத்தில் டோக்கன் பெற்றுள்ளனர்.

வாலாஜாபாத் பத்திரப்பதிவு சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் இல்லாத நிலையில், சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் செல்வம் என்பவர் மாவட்ட பதிவாளர் உத்தரவின் பேரில் பத்திரப் பதிவு பணிகளை கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரேமா ரஞ்சித் குமார் கிரையம் பெற்றுள்ள நிலத்திற்கு அரசு வழிகாட்டு மதிப்பு சதுர அடிக்கு 250 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பத்திரப்பதிவு கட்டண தொகையை ஆன்லைனில் செலுத்தி பத்திரப்பதிவுக்கான டோக்கன் பெற்றுள்ளார்.

இந்நிலையில் பிரேமா ரஞ்சித் குமார் கிரையம் பெறும் இடம் காஞ்சிபுரம் மாநகராட்சியில் வருவதாகவும் அதனுடைய மதிப்பு சதுர அடி 800 ரூபாய் என்பதால் 19 கோடி ரூபாய் மதிப்பு வருவதால் அதற்கு பணம் கட்டினால் பத்திரப்பதிவு செய்வதாக சார் பதிவாளர் அலுவலக பணியாளர் செல்வம் கூறி உள்ளார்.
ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு 19 கோடி ரூபாய் என கூறியதால் பிரேமா ரஞ்சித் குமார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனை அடுத்து பத்திரப்பதிவு செய்ய வழங்கிய ஆவணங்கள் பிரேமா ரஞ்சித் குமார் திருப்பி கேட்ட நிலையில் சார் பதிவாளர் அலுவலகம் ஊழியர் செல்வம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட அரசு வழிகாட்டி நில மதிப்பீட்டில் பத்திரப்பதிவு செய்ய முடியாமலும் பத்திரப்பதிவு செய்ய வழங்கிய ஆவணங்களை திருப்பிப் பெற முடியாமலும் பாதிக்கப்பட்ட ஒன்றிய கவுன்சிலர் பிரேமா ரஞ்சித் குமார் இன்று தனது கணவர் ஆர்வி ரஞ்சித் குமார் உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பத்திரப்பதிவு செய்ய மறுக்கும் சார் பதிவாளர் அலுவலக பணியாளர் செல்வம் மீது மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு தங்களது ஆவணத்தை தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புகார் மனுவினை வழங்கினார்கள்.

