காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
 
					
உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்கள் மீது காலணியை வீச முற்பட்டு அவமரியாதை செய்த ராகேஷ் கிஷோரை கைது செய்ய வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் 50க்கும் மேற்பட்டோர் வழக்கறிஞர்கள் நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற அறையில் வழக்கு விசாரணையில் இருந்த உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்கள் மீது காலணியை வீச முற்பட்டு அவமரியாதை செய்த ராகேஷ் கிஷோரை கைது செய்யவும், அவரின் வழக்கறிஞர் பதிவை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும் காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் காமராஜர் சாலையிலுள்ள நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர் தாடிகார்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ராகேஷ் கிஷோரின் புகைப்படங்களை செருப்பு கொண்டு அடித்தும், காலால் மிதித்தும் கண்டன கோஷங்களை எழுப்பி தங்களது கண்டனங்களை வழக்கறிஞர்கள் பதிவு செய்தனர்.
மேலும் ராகேஷ் கிஷோரின் புகைப்படங்களையும் வழக்கறிஞர்கள் எரிக்கவும் முற்பட்டனர். வழக்கறிஞர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக காமராஜர் சாலையில் சற்று போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் போக்குவரத்தினை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


மேலும் வழக்கறிஞர்களின் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சற்று பரபரப்பும் ஏற்பட்டது.
இதில் பார் அசோசியேஷன் துணைத்தலைவர் கார்த்திக், செயலாளர் நிர்மல் குமார், துணைச் செயலாளர் பிரபு, பொருளாளர் ரேகா ஹரிஹரன், செல்வி.சோனியா, உமா சங்கரி, ஸ்டாலின் அருண், மதிஆதவன், சந்துரு ஹரி புதன், பிரதீப் குமார், லோகு அருள்நாதன், கருணாநிதி, லிங்கேசன், தாடி கார்த்திகேயன், கதிரவன், நரேந்திரன், ஆல்வின் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.


 
			 
			 
			 
			 
			