காஞ்சிபுரத்தில் மாமன்னர் ராஜராஜசோழனின் சதய விழா!

காஞ்சிபுரம் அருகே களக்காட்டூரில் மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழாவையொட்டி காஞ்சி காமகோடி பீடத்தின் இந்து சமய மன்றம் சார்பில் திருக்கோயில் பணிகள் தொடர்ந்து நடைபெற வலியுறுத்தி சனிக்கிழமை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே களக்காட்டூரில் ஊருணி ஆழ்வார் என்ற பெயருடைய அக்னீசுவரர் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலுக்கு மாமன்னர் ராஜராஜசோழன் வெண்ணெய்ப்புத்தூர் உடையான் காடன் மைந்தன் என்பவர் மூலமாக இரு விளக்குகள் சுடர்விட ஆடுகளையும், நிலத்தையும் தானமாக வழங்கியதாக அக்கோயில் கல்வெட்டுக்கள் தெரிவிக்கிறது.

இது போன்ற கோயில் திருப்பணிகள் தொடர்ந்து தொய்வின்றி நடைபெறவும்,விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
காஞ்சி காமகோடி பீடத்தின் சமய, கலை மற்றும் கலாச்சார சேவை அமைப்பான இந்து சமய மன்றம் சார்பில் நடைபெற்ற இவ்விழிப்புணர்வு பேரணி உத்தரமேரூர் சாலையில் கூட்டுச் சாலையிலிருந்து தொடங்கி களக்காட்டூர் அகனீசுவரர் ஆலயம் வரை நடைபெற்றது.

பேரணி தொடக்க விழாவிற்கு காஞ்சிபுரம் வட்டாட்சியர் ரபீக் தலைமை வகித்தார்.
சங்கரா கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் பேரணியை தொடங்கி வைத்தார்.
விழாவில் மத்திய தொல்லியல்துறையின் கல்வெட்டு ஆய்வாளர் பி.டி.நாகராஜன், சிவனடியார் டி.ராஜேந்திரன், சங்கரா கல்லூரி தமிழ்த் துறை தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணி நிறைவில் காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் பேசுகையில், “களக்காட்டூர் கிராமத்தில் காஞ்சி காமகோடி பீடத்தின் 42 வது பீடாதிபதி பிரம்மானந்த கஜேந்திர சரஸ்வதி சுவாமிகள் சித்தி ஸ்தலம் என்ற சிறப்புக்குரியது.”

“காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உத்தரவின்படி வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களில் திருப்பணிகள், பூஜைகள் தொய்வில்லாமல் நடைபெற வரலாற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது.”
“பேரணியில் ராஜராஜசோழன் யானை மீது அமர்ந்து களக்காட்டூர் கோயிலுக்கு வருவது போன்று மாதிரி வடிவம் உருவாக்கப்பட்டு எடுத்து வந்தோம்” என்றார்.

