வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களா?: அதிகாரிகள் திடீர் சோதனை
கும்மிடிப்பூண்டி அருகே பிரபல வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் பேரில், திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஜி என் டி சாலையில் நூற்றுக்கு மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இங்கு சென்னையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு டப் கொடுக்கக்கூடிய வகையில் மளிகை, ஜவுளி, நகை, பாத்திரம் என பல்வேறு விதமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இங்குள்ள பல கடை மற்றும் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்வதாக மாவட்ட தொழிலாளர் நலத்துறை மற்றும் குழந்தைகள் நலம் மற்றும் சிறப்பு சேவைத்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததால், திடீரென சோதனை நடத்தினார்கள். சோதனையின் போது தொழில் நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களின் ஆவணங்களை அலசி ஆராய்ந்தனர்.

இதில் தனியாருக்கு சொந்தமான பிரபல காலணிகள் விற்பனை கடை, சூப்பர் மார்க்கெட் மற்றும் டீ கடையில் வேலை செய்த நான்கு வடமாநில ஆண் குழந்தைகள், ஒரு தமிழக ஆண் குழந்தை மற்றும் மூன்று பெண் குழந்தை உட்பட எட்டு குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
இந்த சஸ்பெண்ட் சோதனை விவகாரம் கும்மிடிப்பூண்டியில் காட்டுச் தீப்போல் பரவியதால் மீட்கப்பட்ட சிறுவர்களின் உறவினர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
அதேபோல் பெரும்பாலான கடைகளில் இருந்த குழந்தை தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனத்தினர் மறைத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கும்மிடிப்பூண்டி பஜார் வீதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

