பெண்களுக்கான இஸ்லாமிய கல்வியகம் சார்பில் ஆலிமாக்களுக்கான பட்டமளிப்பு விழா
மதுரை மதரஸதுர் ரஹ்மான் பெண்களுக்கான இஸ்லாமிய கல்வியகம் சார்பில் நடைபெற்ற ஆலிமாக்களுக்கான பட்டமளிப்பு விழாவில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் ஆலிமா பட்டம் பெற்றனர்.

MR கல்வி நிறுவனம் மற்றும் அறக்கட்டளை சார்பில் செயல்பட்டுவரும் மதரஸதுர் ரஹ்மான் பெண்களுக்கான இஸ்லாமிய கல்வியகத்தில் ஆலிமா பயின்று முடித்த பெண்களுக்கான ஆலிமா பட்டம் வழங்கும் பட்டமளிப்பு விழா மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தென்காசி மாவட்ட அரசு காஜியும், கடையநல்லூர் ஃபைஜுல் அன்வார் அரபிக்கல்லூரியின் முதல்வருமான முஹ்யித்தீன் ஃபைஜி ரஷாதி ஹஜ்ரத் ஆலிமா பட்டத்தினை வழங்கி பாராட்டி சான்றுகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து இஸ்லாமும் பெண்களும், இஸ்லாம் கூறும் நல்லறங்கள் என்ற தலைப்பிலும் சமுதாயத்தில் ஆலிமாக்களின் பங்கு, கல்வியின் சிறப்பு, இஸ்லாம் வழிபாடுகளில் மட்டுமல்ல; மனித நேயமும் மக்கள் சேவையும் ஆகிய தலைப்புகளிலும் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆலிம்கள் மற்றும் ஆலிமாக்கள், பேராசியர்கள் உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
இரு அமர்வுகளாக நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் மதுரை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான ஆலிமாக்கள் மற்றும் இஸ்லாமிய சமூக பெரியவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

