பெண்களுக்கு 33%இட ஒதுக்கீடை பிரதமர் உறுதி செய்ய வேண்டும்: மதுரையில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் வலியுறுத்தல்
 
					மோடி போல நாங்கள் பொய் கூற மாட்டோம் பெண்களுக்கு உடனடியாக 33 சதவீத இட ஒதுக்கீடை பிரதமர் உறுதி செய்ய வேண்டும் என மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி ஹசினா சையத் வலியுறுத்தி உள்ளார்.

மதுரை அழகர் கோவில் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு உணவு விடுதி அரங்கில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவியாக கமலா பதவியேற்பு விழா நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு மாநில மகிலா காங்கிரஸின் தலைவி ஹசினா சையத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மதுரை மாநகர் மகிளா காங்கிரசின் தலைவியாக கமலா என்பவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன், வீர வாஞ்சிநாதன், பூக்கடை கண்ணன், வழக்கறிஞர் பிரிவு பிஸ்மில்லா கான், காங்கிரஸ் தொழிற்சங்க மாவட்ட தலைவர் பாலாஜி, மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில மகிளா காங்கிரஸ் தலைவி ஹசினா சையத் பேசுகையில், “மோடி அரசு பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடை உடனடியாக அமல்படுத்த வேண்டும். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் இதனை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.”

“பிரதமர் மோடி போல நாங்கள் பொய் கூறுவது கிடையாது. எங்களுடைய தலைவர் ராகுல் காந்தி, பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிக அளவில் பெண்கள் போட்டியிடும் உரிமையைப் பெற்றுத் தர நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம், தமிழ்நாடு முழுவதும் மகிளா காங்கிரஸ் தலைவிகள் நியமனம் செய்யப்பட்டுவிட்டனர் அவர்கள் தங்களது பணிகளை தொடங்கி செய்து வருகிறார்கள்”, எனக் கூறினார்.



 
			 
			 
			 
			 
			