மருது பாண்டியர்களின் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை
 
					மதுரையில், உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு அமைச்சர் மூர்த்தி மற்றும் பல்வேறு கட்சித் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விடுதலைப் போராட்ட வீரர்கள் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் 224 ஆவது குருபூஜையை முன்னிட்டு மதுரை தெப்பக்குளத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் திருவுருவ சிலைக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ தளபதி ஆகியோர் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதேபோல், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சித் தொண்டர்கள் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மருதுபாண்டியர்கள் மதுரை ஆதீன மடத்தின் சீடர்கள், இந்திய நாட்டின் சுதந்திரத்திற்க்கான தங்களுடைய இன்னுயிரை நீத்தவர்கள், மருதுபாண்டியர்கள் மதுரை ஆதீன மடத்தில் திருஞானசம்பந்தத்துக்கு வெள்ளி தேர் செய்து கொடுத்து உள்ளனர் என்றும், மருதுபாண்டியர்களின் நினைவை தமிழ்நாடு மட்டுமல்லாது உலகமே போற்றுகிறது என்றும் குறிப்பிட்டார்.
 
 
மேலும் இளைஞர்கள் மருதுபாண்டியர்களை மறக்கக் கூடாது என்றும், மருதுபாண்டியர்கள் தங்களுடைய உடல், பொருள், ஆவி அனைத்தும் நாட்டுக்காக தியாகம் செய்து அர்ப்பணித்துள்ளனர் என்றும், இளைஞர்கள் மருதுபாண்டியர்களின் தியாகத்தை போன்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.


 
			 
			 
			 
			 
			