“உறுப்பு தானம் என்பது உயிர் காக்கும் ஒரு நடவடிக்கை” – மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை

“உறுப்பு தானம் என்பது உயிர் காக்கும் ஒரு நடவடிக்கை” – மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை

“இந்தியாவில் உறுப்பு தான விகிதம் மிகக் குறைவாக உள்ள நிலையில், மேம்பட்ட உறுப்பு மாற்று சிகிச்சைகளே உயிர்காக்கும் நம்பிக்கையை வழங்குகின்றன”: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை

இந்தியாவில் மக்களிடையே விழிப்புணர்வு குறைவாக இருப்பது, தவறான கருத்துக்கள் மற்றும் உணர்வுரீதியான தயக்கங்கள் காரணமாக உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை பத்து லட்சம் நபருக்கு 1க்கும் குறைவாக இருப்பதால், உடலுறுப்புகளுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது.

மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் சிறப்பு மருத்துவ நிபுணத்துவத்தின் ஆதரவுடன், ஆண்டுக்கு சுமார் 40 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளையும், 60 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளையும் மற்றும் ஒட்டுமொத்த அளவில் 2000-க்கும் மேற்பட்ட உறுப்புமாற்று சிகிச்சைகளையும் இதுவரை செய்துள்ளது.

இந்தியாவில் உறுப்பு தான விகிதம் பத்து லட்சம் மக்களுக்கு ஏறக்குறைய ஒரு தானமளிப்பவர் என்ற அளவில் மிகவும் குறைவாக இருப்பதால், உறுப்புகளின் தேவைக்கும் கிடைப்பதற்கும் இடையிலான இடைவெளி மிகப்பெரியதாக உள்ளது.

இந்தச் சூழலில், உயிருடன் இருப்பவர்கள் மற்றும் மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து பெறப்படும் உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மேம்பட்ட உறுப்பு மாற்று சிகிச்சை நுட்பங்களைக் கையாள்வதும் மேலும் பல உயிர்களைக் காப்பாற்றுவதற்கு முக்கியமாகும் என்று மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஒரு குறிப்பிட்ட ஆண்டில், ஒரு பிராந்தியம் அல்லது நாட்டில் பத்து இலட்சம் மக்களில் இறந்த (மூளைச்சாவு அடைந்த) நபர்களில் உறுப்பு தானமளிப்பவர்களின் எண்ணிக்கையே உறுப்பு தான விகிதம் எனக் குறிப்பிடப்படுகிறது.

அதிக மக்கள் தொகை இருந்தபோதிலும், ஸ்பெயின் போன்ற நாடுகளில் பத்து இலட்சம் பேருக்கு 30 நபர்களுக்கும் மேல் இருக்கும் விகிதத்துடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் இந்த விகிதம் 1-க்கும் குறைவாகவே உள்ளது.

ABO-பொருந்தாத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது, தானமளிப்பவர் மற்றும் பெறுநரின் இரத்தப் பிரிவுகள் நிலையான ABO இரத்த வகை அமைப்புப்படி பொருந்தாத நிலையில் செய்யப்படும் ஒரு வகை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையாகும்.

பொதுவாக, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் (குறிப்பாக சிறுநீரகங்கள்) தானம் பெறுநரின் நோயெதிர்ப்பு அமைப்பு, தானம் பெறப்பட்டு பொருத்தப்பட்ட உறுப்பைத் தாக்குவதைத் தடுக்க, இணக்கமான இரத்தப் பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கிடையே தான் செய்யப்படுகின்றன. ABO-பொருந்தாத நிகழ்வுகளில், இந்த இயற்கையான நோயெதிர்ப்புத் தடையானது மேம்பட்ட மருத்துவ நெறிமுறைகள் மூலம் சமாளிக்கப்பட்டு, உறுப்புமாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி அனுசரிக்கப்படும் உலக உறுப்புதான தினத்தை முன்னிட்டு மருத்துவமனை ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மருத்துவ நிபுணர்கள் இது தொடர்பான விரிவான தகவல்களை வழங்கினர்.

இந்த நிபுணர்கள் குழுவில், இரைப்பை குடலியல் துறையின் மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சை துறையின் இயக்குனர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி; மருத்துவ நிர்வாக அதிகாரி டாக்டர் பி. கண்ணன்; சிறுநீரகவியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் K. சம்பத் குமார்; சிறுநீரக அறுவை சிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் R. ரவிச்சந்திரன்; மருத்துவ மற்றும் அறுவைசிகிச்சை இரைப்பை குடலியல் துறையின் துறைத் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் N. மோகன் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் ஸ்ரீனிவாசன் ராமச்சந்திரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

சிறுநீரகவியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் K. சம்பத் குமார் பேசுகையில், “உறுப்பு தானம் என்பது உயிர் காக்கும் ஒரு நடவடிக்கையாகும். நம் நாட்டில், அதிக மக்கள் தொகை இருந்தபோதிலும், உறுப்பு தான விகிதம் பத்து இலட்சம் பேருக்கு ஒன்றுக்கும் குறைவாகவே உள்ளது.”

“மூளைச்சாவு பற்றிய பொதுமக்களின் புரிதலின்மை, கலாச்சார நம்பிக்கைகள், மத ரீதியான தவறான கருத்துக்கள் மற்றும் உணர்வு ரீதியான தயக்கம் ஆகியவை அந்த நெருக்கடியான, துயரமான தருணங்களில் உறுப்புதானம் செய்வது குறித்து தைரியத்துடன் முடிவெடுப்பதற்குத் தடையாக உள்ளன. நாம், உறுப்பு தானம் குறித்த கல்வியை பள்ளிகளின் பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும்; மற்றும் சமூக சுகாதாரத் திட்டங்களில் அவற்றை ஒருங்கிணைக்க வேண்டும். வெளிப்படையான, நேர்மையான நெறிமுறைகளைப் பின்பற்றுவதை மருத்துவமனைகள் உறுதி செய்ய வேண்டும்.”

“மேலும் மூளைச்சாவு ஏற்பட்டதன் கடும் துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு சரியான நேரத்தில் ஆலோசனை வழங்க வேண்டும். உறுதியான கொள்கைகள் மற்றும் தொடர்ச்சியான பொதுக் கல்வியின் ஆதரவுடன், சமூகத்தின் பார்வையில் ஒரு ஆக்கப்பூர்வ மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே, உறுப்புகளின் தேவைக்கும் மற்றும் அவைகள் கிடைப்பதற்கும் இடையிலான இடைவெளியை நம்மால் உண்மையில் குறைக்க முடியும்” என்றார்.

மருத்துவ நுட்பங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அவர் மேலும் பேசுகையில், “பற்றாக்குறையை ஈடுசெய்ய உதவும் மேம்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறைகளை மருத்துவமனைகள் பின்பற்றுவதும் சம அளவில் முக்கியமானது. தொடர்ச்சியான முயற்சிகள் மூலம், எங்கள் மருத்துவர்கள் குழு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளைச் செய்வதில் வலுவான நிபுணத்துவத்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு மிகவும் மேம்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் திறன்மிக்க பிரிவுகளில் ஒன்றை நாங்கள் கொண்டுள்ளோம்” என்றார்.

இரைப்பை குடலியல் மருத்துவ மற்றும் அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் ஸ்ரீனிவாசன் ராமச்சந்திரன் பேசுகையில், “நீண்ட காலமாக மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து தானமாகப் பெற்று செய்யப்படும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு நீண்ட காலமாக ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது என்பது ஊக்கமளிக்கும் செய்தியாகும்.”

“ஒழுங்கமைக்கப்பட்ட இறந்தவர்களிடமிருந்து பெறப்படும் உறுப்பு தான திட்டத்தை தமிழகம்தான் இந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தியது. தற்போது இறந்தவர்களிடமிருந்து உறுப்பு தானம் பெற்று உறுப்புமாற்று சிகிச்சை செய்வதில் நம் நாட்டிற்கே தமிழகம் வழிகாட்டுகிறது. 2024 ம் ஆண்டில் மட்டும், இறந்த பிறகு உறுப்பு தானம் செய்த தானமளித்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 268 ஆக இருக்கிறது. இந்தியாவில் பிற மாநிலங்களின் சராசரியை விட இது மிக அதிகம். இது நாட்டின் உறுப்பு மாற்று இயக்க வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாகும்.”

“இந்த சாதனை அளவானது, TRANSTAN (தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம்), மருத்துவமனைகள் மற்றும் உறுப்பு தானம் மூலம் பிறரின் உயிரைக் காப்பாற்ற முடிவெடுத்த குடும்பங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாகும். ஆனால் நாட்டின் பிற பகுதிகளில் உறுப்புதான நிகழ்வுகள் அவ்வளவு ஊக்கமளிப்பதாக இல்லை.”

“மத்திய அரசு, NOTTO (தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு) மூலமாகவும், பல்வேறு அரசு சாரா நிறுவனங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வந்தாலும், இந்த முயற்சிகள் கிராமப்புறங்கள் மற்றும் சிறுநகரங்கள் உட்பட நாடெங்கிலும் பரவலாக மேற்கொள்ளப்பட வேண்டும்; இப்பகுதிகளில் உறுப்பு தானம் பற்றிய தவறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் இன்னும் ஆழமாக இருந்து வருகின்றன” என்றார்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *