பொன்னேரி அருகே உரிமைக்காக போராடிய மக்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்த போலீஸ்: நேரில் சென்று ஆறுதல் கூறிய MLA

பொன்னேரி அருகே உரிமைக்காக போராடிய மக்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்த போலீஸ்: நேரில் சென்று ஆறுதல் கூறிய MLA

பொன்னேரி நகராட்சி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ஆரணி ஆற்றில் தண்ணீரை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 100க்கும் மேற்பட்டோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர், இதுதொடர்பாக அமைச்சரை நேரில் சந்தித்து பிரச்சினைகளை முறையிட்டு தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன.

பாதாள சாக்கடை திட்டப் பணிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ராட்சதக் குழாய்கள் மூலம் தண்ணீர் ஆரணி ஆற்றில் வெளியேற்றுவதற்கான பணிகள் நேற்று தொடங்கின.

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து ஆற்றில் தண்ணீரை வெளியேற்ற பொதுமக்கள் நேற்று முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

2வது நாளாக இன்று சின்னக்காவனம் கூட்டுச்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கழிவு நீரை ஆற்றில் வெளியேற்றுவதால் பொதுமக்கள், கால்நடைகள் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் குடிநீர் மாசடைந்து நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் இருப்பதாக புகார் தெரிவித்தனர்.

2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்று பேருந்தில் ஏற்றி கைது செய்தனர். பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்த நிலையில் பெண்கள், ஆண்கள் என பாரபட்சமின்றி தரதரவென இழுத்துக் கொண்டும் குண்டு கட்டாக தூக்கிச் சென்றும் 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் பேருந்துகளில் ஏற்றி திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது பெண் ஒருவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம் மக்களை விரட்டி விரட்டி சென்று இழுத்து கைது செய்து பேருந்தில் ஏற்றினார். காவல்துறையை போன்று வட்டாட்சியர் மக்களை ஓடி துரத்தி துரத்தி இழுத்து கைது செய்தார். தொடர்ந்து காவல்துறையினர் 100க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டு இரண்டாவது நாளாக பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவியது.

இதனிடையே கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட மக்களை பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பிரச்சினைகள் குறித்து நாளை சம்மந்தப்பட்ட துறை அமைச்சரை நேரில் சந்தித்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக” உறுதி அளித்தார்.

“கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தண்ணீரை ஆற்றில் வெளியேற்றுவதால் குடிநீர் பாதிக்கும் என மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும், மக்களை பாதிக்காத வகையில் திட்டத்தை செயல்படுத்தி தர வேண்டும் என்று அமைச்சரிடம் முறையிட்டு தீர்வு காண்பதாகவும்” தெரிவித்தார்.

“காவல்துறையுடன் இணைந்து வட்டாட்சியர் மக்களை விரட்டி விரட்டி கைது செய்தது குறித்த கேள்விக்கு சட்டத்திற்கு புறம்பாக மக்களை இது போன்று கைது செய்வது கண்டிக்கத்தக்கது” என்றார்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *