ராமநாதபுரத்தில் தேசிய கண் தான விழிப்புணர்வு விழிப்புணர்வு பேரணி

தேசிய கண் தான விழிப்புணர்வு இருவார விழாவினை முன்னிட்டு, பொதுமக்களுக்கு கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
கண் தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 25.08.2025 முதல் 08.09.2025 வரை தேசிய கண்தான விழிப்புணர்வு வார விழா கடைப்பிடிக்கப்படுகின்றது. கண் தானம் பற்றிய முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்திடும் ஒரு முக்கிய நிகழ்வாக இந்த விழாவானது நடைபெறுகின்றது. கண் தானம் செய்ய வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், கண் பார்வையற்ற மக்களுக்கு பார்வையை வழங்கவும் இது உதவுகின்றது.
அதனடிப்படையில் 40ஆவது தேசிய கண் தானம் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்திடும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் கண்தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் கண்தான விழிப்புணர்வு கையெழுத்து பிரச்சார பதாகையில் கையெழுத்திட்டதுடன், மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்தார்.
இப்பேரணியானது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கி புதிய பேருந்து நிலையம் வழியாக சென்று மீண்டும் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையை வந்தடைந்தது. மேலும் இப்பேரணியில், இயன்ற வரை இரத்ததானம் இறந்த பின்பு கண்தானம், கண்தானம் செய்வீர் புதுவாழ்வு அளிப்பீர், முறையான பரிசோதனை முற்றாமல் பாதுகாக்கும் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ மாணவிகள் கைகளில் ஏந்தி சென்றனர்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கண்தானம் தொடர்பாக விழிப்புணர்வு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய தொண்டு நிறுவனங்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர் என 7 நபர்களுக்கு கேடயங்களும் மற்றும் 10 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பேராசிரியர் அமுதாராணி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க தலைமை கண் மருத்துவர் சுபசங்கரி மற்றும் மருத்துவ கல்லுாரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.