ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கோவில் நிர்வாகிகள் மனு
 
					ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கோவில் இடம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்திட வலியுறுத்தி சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா வாலிநோக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பட்டினம் காத்தார் என்ற சாத்தார் அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்துவரும் பக்தர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் குலதெய்வமாக விளங்கி வருகிறது.
இந்தக் கோயில் பல தலைமுறைகளாக வணங்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இக்கிராமத்தைச் சுற்றி 500 குடும்பங்களுக்கும் மேற்பட்டவர்கள் குலதெய்வ வழிபாடு செய்து வருகின்றனர்.
இக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திர விழா, மற்றும் சிவராத்திரி அன்றும் அனைத்து குலதெய்வ வழிபாடு நடத்துபவர்களும் இங்கு வந்து நேர்த்திக்கடன் செய்வது வழக்கமாக உள்ளது.
மேலும் இக்கோயிலை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் சிலர் கோயிலுக்கு வெளிப்புறம் போட்டு இருந்த வேலியையும் உடைத்து விட்டு 30 பேர்களுக்கும் மேல் வந்து பிரச்சனை செய்து வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் வந்து கோயிலை சுற்றி உள்ள இடங்களை அளவிடும் பணிகளை நிறைவு செய்யவும், மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் திருக்கோயில் நிர்வாகிகளுக்கு போதுமான பாதுகாப்பு அளித்திடவேண்டி நிர்வாக கமிட்டி தலைவர் வடிவேலு தலைமையில் கிராமத்தினர் ஏராளமானோர் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.


 
			 
			 
			 
			 
			