ராமநாதபுரம் SP-யிடம் கண்ணீர் மல்க மனு அளித்த விவசாயி!
 
					ராமநாதபுரம் அருகே நீதிமன்ற உத்தரவின் வழிகாட்டுதல்படி நிலத்தை அளக்க விடாமல் தடுக்கும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க எஸ்பி இடம் கண்ணீர் மல்க விவசாயி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான். இவருக்கு சொந்தமான இடம் சக்கரக்கோட்டை குரூப் ஏ ஒன் மஹால் அருகில் 20 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தை அளந்து கல் ஊன்ற வரும் பொழுது ராமநாதபுரம் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த ரத்தினவேல் சாமி என்பவர், அடியாட்களுடன் நிலத்தை அளக்கவிடாமல் தடுத்துள்ளார். இதுகுறித்து நிலத்தின் உரிமையாளர் சாஜகான் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், மாவட்ட நில அளவையர், கேணிக்கரை காவல்துறை ஆய்வாளர் மற்றும் ரத்தினவேல் சாமி ஆகியோர்கள் இணைந்து ஷாஜகானுக்கு சொந்தமான சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான 20 சென்ட் நிலத்தை அளந்து முறைப்படி ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனை மீறி நிலத்தை அளக்கவிடாமல் தடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து நிலத்தின் உரிமையாளர், ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஸ் அவர்களை சந்தித்து தன்னுடைய நிலத்தை அளக்கவிடாமல் கூலிப்படைகள் தடுப்பதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். இதை விசாரித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியாக கேணிக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீப காலமாக போலி பத்திரங்கள் பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. நிலத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் பத்திரப்பதிவு செய்வது போலியாக பத்திரங்களை உருவாக்கி அதிக மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்வது போன்ற குற்ற சம்பவங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 
			 
			 
			 
			 
			