ராமநாதபுரத்தில் காமராஜர் வேடம் அணிந்து ஆட்சியரை வரவேற்ற மாணவ மாணவிகள்
 
					காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவில், மாணவ மாணவிகள் காமராஜர் வேடம் அணிந்து மாவட்ட ஆட்சியரை அன்புடன் வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 155 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 11 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையேற்று புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தார்.

முன்னதாக ராமநாதபுரம் வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் 123 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோரை பள்ளி மாணவ, மாணவிகள் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவத்தில் வேடமிட்டு, மலர் கொடுத்து வரவேற்றனர்.

அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் கார்மேகம், ராமநாதபுரம் நகர் மன்ற துணைத்தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


 
			 
			 
			 
			 
			