சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக ஆசிரியருக்கு தேசிய ஆசிரியர் விருது
சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக ஆசிரியருக்கு தேசிய ஆசிரியர் விருது வழங்கப்பட்டிருப்பது தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக கணிப்பொறித் துறையின் தலைவரும், பேராசிரியருமான டாக்டர் சங்கர் ஸ்ரீராம் அவர்கள் மத்திய கல்வி அமைச்சர் ஸ்ரீ தர்மேந்திர பிரதான் முன்னிலையில், இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களிடமிருந்து ஆசிரியர் தினமான இன்று தேசிய ஆசிரியர் விருதைப் பெற்றுக் கொண்டார்.
பொறியியல் கல்விப் பிரிவில் இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே ஆசிரியர் டாக்டர் சங்கர் ஸ்ரீராம் ஆவார். இந்த விருது கௌரவச் சான்றிதழ், பதக்கம், ரூ.25,000 ரொக்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ஆசிரியர் தினத்தன்று புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 21 ஆசிரியர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற ஆசிரியர்களுடன் இந்தியப் பிரதமர் செப்டம்பர் 4 ஆம் தேதி இரவு உணவின் போது உரையாடினார். மேலும் செப்டம்பர் 5 ஆம் தேதி பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைத்து வெற்றியாளர்களையும் வாழ்த்துவதற்காக அமைச்சர் ஸ்ரீ தர்மேந்திர பிரதான் இரவு உணவு வழங்கினார்.

