புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளிய புன்னைநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன்
 
					தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை திரளான பக்தர்கள் தரிசித்து சென்றனர்.

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் உள்ள அம்மன் புற்று மண்ணால் ஆனது. அதனால் அபிஷேகம் எதுவும் செய்யப்படுவதில்லை.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக்காப்பு மட்டுமே சாற்றப்படுகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முத்துப் பல்லக்கு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து கடந்த 10-ந் தேதி பால்குட விழாவும், அம்மன் முத்துமணிச் சிவிகையில் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட பல்லக்கில் உற்சவ அம்மன் எழுந்தருளி முத்து பல்லாக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.
இதையடுத்து விழாவின் நிறைவு நாளன்று (ஆகஸ்ட் 12 ) இரவு எழுந்தருளிய அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், துர்க்கை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், இரத்தினாபரண அலங்காரமும் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.
அதைத் தொடர்ந்து பிரபல நாதஸ்வர கலைஞர்களின் சிறப்பு நாதஸ்வரம் மற்றும் வயலின் இசை ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தும், இசை நிகழ்ச்சியை கண்டும் ரசித்தனர்.


 
			 
			 
			 
			 
			