பொழுது போக்கிய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய குழு! – மாணவர்கள், பெற்றோர்கள் அதிருப்தி!!

ஊஞ்சல் விளையாடியும், செல்போனை ரசித்தும் பொழுது போக்கிய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய குழுவினர்!
காற்று மாசு அளவிட வந்த ஊழியர்களின் செயல், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தராஜா கண்டிகை அரசுப் பள்ளியில் கடந்த 26 ஆம் தேதி பத்தாம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்த நிலையில் அவர்கள் கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனையிலும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இந்தநிலையில் அதிகமாக புகை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, சம்பந்தப்பட்ட அரசு பள்ளியில் நேற்று ஆய்வு செய்ய வந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கஜலட்சுமி மற்றும் அவரது குழுவினரை மாணவர்களின் பெற்றோர்கள் சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரம் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது சென்னை கிண்டியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தின் சார்பாக கும்மிடிப்பூண்டி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கஜலட்சுமி தலைமையில் பாதிப்பு ஏற்பட்ட அரசு பள்ளியில் நவீன இயந்திரங்கள் மூலம் காற்று மாசுவின் அளவை கண்டறியும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த பணியானது 7 நாட்கள் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆற்றில் கலக்கும் மாசுவின் அளவை கணக்கிட வந்தவர்கள், அதற்கான பணிகளை மேற்கொள்ளாமல் ஊஞ்சலில் அமர்ந்து விளையாடிய படியும், செல்போனை ரசித்தபடியும், நேரத்தை கழித்து வந்தது மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.