அரசு நடவடிக்கையால், பரிதவிக்கும் பழங்குடியின மக்கள்
திருவள்ளூர் அருகே பழங்குடியின மக்களுக்காக வீட்டுமனை வழங்கிட புறம்போக்கு நிலத்தில் மேற்கொண்ட அளவீடு பணிகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரக்காடு ஊராட்சிக்குட்பட்ட கிருதலாபுரம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இவர்களது ஊருக்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த காலங்களில் விவசாயம் செய்து அனுபவித்து வந்துள்ளனர்.
அண்மைக்காலமாக இந்த புறம்போக்கு நிலம் தரிசு நிலமாக விடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக வருவாய் துறையினர் அரசு புறம்போக்கு நிலத்தை தூய்மைப்படுத்தி அளவீடு செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தங்களது கிராமத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி கிருதலாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அளவீடு பணிகளை மேற்கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் பணிகளைத் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வேறு கிராம மக்களை தங்களது கிராமத்தில் குடியமர்த்தினால், தங்களது கிராமத்தில் வீடு இல்லாத மக்களுக்கு வீட்டு மனைக்கு எங்கே செல்வது என கேள்வி எழுப்பினர். பல குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் வெளியூர் மக்களை குடி அமர்த்தி விட்டு தங்களது மக்கள் இதேபோல வீட்டுமனை தேடி வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என ஆதங்கம் தெரிவித்தனர்.
வீடு இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். பொதுமக்கள் போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் காளியம்மாளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தங்களது கிராமத்திற்கு வீட்டு மனை, விளையாட்டு திடல் என அடிப்படை வசதிகளை செய்து தராமல் ஏன் வெற்று கிராம மக்களுக்கு தங்களது கிராமத்தில் இடம் ஒதுக்கீடு செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அளவீடு பணிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

