வவ்வால்களுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம் – இயற்கையை காப்போம்!

“வவ்வால்களின் ஓசையிலும், மரத்தின் நிழலிலும் பாசம் கலந்த அமைதி வாழும் அந்த கிராமம் —
நமக்கு ஒரு பெரிய பாடம் சொல்லுகிறது:” அது என்ன?
“இயற்கையுடன் ஒத்துழைப்பு – அதுவே நம் வாழ்வு.”
மூன்று தலைமுறைகளாக ஆலமரத்தில் வாழ்ந்து வரும் 500க்கும் மேற்பட்ட வவ்வால்களுக்காக தீபாவளி மற்றும் கோயில் திருவிழாக்களின்போது பட்டாசு வெடிக்காமல் இருக்கும் கிராமத்து மக்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வேடந்தவாடி கிராமத்தை அடுத்துள்ள கிராமம் வி பி குப்பம். இந்த பகுதியில் சுமார் மூன்று தலைமுறைக்கு முன்பு வளர்ந்த ஆலமரத்தில் 500க்கும் மேற்பட்ட வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன. இவ்வவ்வால்களை அப்பகுதி மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.
பழமை வாய்ந்த இந்த ஆலமரத்து அடியில் காளியம்மன் கோயில் இருப்பதால், இங்கு வரும் பக்தர்கள் வவ்வால்களின் ஓசை மிக இனிமையாக இருப்பதாகும், இங்கு வரும்போது மனதிற்கு அமைதியை ஏற்படுவதாகும் கூறுகின்றனர்.

மேலும் இப்பகுதியை சுற்றியுள்ள கிராமத்து மக்கள் தீபாவளியின் போது பட்டாசுகள் வெடித்தால், அது வவ்வாலுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அப்பகுதியில் தீபாவளியன்று 150 மீட்டர் வரை பட்டாசுகளை வெடிப்பதை தவிர்த்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். மேலும் கோவில் திருவிழாக்களிலும் பட்டாசுகள் வெடிப்பதில்லை.
மேலும் வவ்வாலை வேட்டையாட வருபவர்களையும் தடுத்து வவ்வாலை பாதுகாத்து வருகின்றனர் இக்கிராமத்து மக்கள்.
“இது தான் உண்மையான தீப ஒளி” என்று நெட்டிசன்கள் பாராட்டும் அளவுக்கு ஒரு கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

