தூத்துக்குடியில் மின்னணு கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் “சூழல் சிங்கம்” இணையதளம்

தூத்துக்குடியில் மின்னணு கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் “சூழல் சிங்கம்” இணையதளம்

தூத்துக்குடியில், பொதுமக்களிடமிருந்து மின்னணு கழிவுகளை சேகரித்து மறு சுழற்சி செய்யும் “சூழல் சிங்கம்” எனும் இணையதளத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி. தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இளம் தொழில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் “புத்தொழில் களம்” என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட குழுவினர், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் வரக்கூடிய மின்னணு கழிவுகளை சேகரித்து, அவற்றை மறுசுழற்சி செய்யும் வகையில் “சூழல் சிங்கம்” என்ற அமைப்பை நிறுவியுள்ளனர்.

இதன் தொடக்க நிகழ்ச்சி இன்று (03/09/2025) தூத்துக்குடியில் உள்ள சுப்பையா வித்யாலய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கனிமொழி கருணாநிதி எம்.பி. கலந்து கொண்டு, “சூழல் சிங்கம்” அமைப்பின் இணையதளத்தைத் தொடங்கி வைத்து, பள்ளி மாணவிகள் சேகரித்த மின்னணு கழிவுகளை பெற்றுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து நிகழ்வில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி. “தூத்துக்குடி மாவட்டத்தில் ‘புத்தொழில் களம்’ என்ற முன்னெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் தற்போது ‘சூழல் சிங்கம்’ என்ற அமைப்பை துவங்கியுள்ளனர். சமூக பாதுகாப்பு மிகவும் அவசியமானது. மேலும், உலக அளவில் நாம் அச்சப்பட வேண்டிய ஒன்று காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம் என்பதைக் அனைவரும் அறிவோம்.”

“நாட்டில் பல பகுதிகளில் மரங்களை வெட்டுவது, மாசு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகள் அமைப்பது, வெயிலின் தாக்கம் மற்றும் கடற்கரையில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற காரணங்களால் பெருமளவு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.”

“இதற்குக் காரணம் நவீன பொருட்கள் மற்றும் சாதனங்களை குறுகிய காலத்திற்கு பயன்படுத்துவது ஆகும். நாம் அவற்றைப் பராமரித்து அதிக காலம் பயன்படுத்த பழகினால், மின்னணு கழிவுகளை குறைத்துக் கொள்ள முடியும் மற்றும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம்.”

“இதுபோன்ற விழிப்புணர்வை பள்ளி மாணவிகள் அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, மின்னணு கழிவுகளை சேகரிக்கும் வாகனத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, Deep Cycle Hub நிறுவனர்கள் தீப்தி கேசரினோ மற்றும் ஜோசப் கேசரினோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *