தூத்துக்குடி கவினின் ஆணவ படுகொலை: உறுதியான நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
தூத்துக்குடி கவினின் ஆணவ படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ், இதற்காக காங்கிரஸ் கட்சி போராடும் என்றும் உறுதியளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட பொறியாளர் கவினின் பெற்றோரை சந்தித்து ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஊர்வசி அமிர்தராஜ் ஆறுதல் கூறினார்.
அப்போது அவரிடம் சிறப்பு சட்டம் இயற்ற காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூடியிருந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து ஊர்வசி அமிர்தராஜ் கூறுகையில், “கவினின் ஆணவ படுகொலையில் தொடர்பு உடையவர்கள் யாராக இருந்தாலும் குடும்பமாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும்.”
“இந்த துறை சிஸ்டமான நிகழ்வு இதனுடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வேதனைக்குரிய காரியம் எல்லா சமூக மக்களும் எதிர்க்கிறார்கள். அப்படி நடக்க கூடாது என்று எல்லா சமூக மக்களும் நினைக்கிறார்கள். இதுவே கடைசியாக இருக்க வேண்டும். ஈசியாக இருக்க வேண்டுமென்றால் அப்படிப்பட்ட தண்டனையை வழங்க வேண்டும்.”
“இதற்காக இன்னும் சட்டங்களை கடுமையாக்க காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தில் தொடர்ந்து போராடும். சட்டங்களை எடுத்து வர அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். இந்த சம்பவத்தில் இன்னும் விரைவாக அனைவரையும் கைது செய்ய வேண்டும். மிக அழுத்தமாக வலியுறுத்துகிறோம்.”
பின்னர் ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தைக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தனர். அப்போது அவர், “கவின் தந்தையிடம் பேச வேண்டும். கொடுங்கள்!” என தெரிவித்தார். தொலைபேசியில் கவின் தந்தை பேசினார்.
அப்போது, “அண்ணா, கைது செய்ய சொல்லி அறிக்கை வெளியிடுங்கள். நான்கு நாட்கள் ஆகிவிட்டது” என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகையிடம் தொலைபேசியில் கண்ணீர் மல்க கவின் தந்தை சந்திரசேகர் கதறி அழுதார்.

