தூத்துக்குடி: ஆணவக்கொலை செய்யப்பட்ட கவின் உடலுக்கு கனிமொழிMP, அமைச்சர்கள் இறுதி அஞ்சலி
 
					ஆணவக்கொலை செய்யப்பட்ட கவின் உடலுக்கு தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி எம்.பி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞரான கவின், கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று நெல்லையில் கொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்துள்ள நிலையில், பெண்ணின் சகோதரரான சுர்ஜித் என்பவர் கைது செய்யப்பட்டார்.
சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் சப்-இன்ஸ்பெக்டர்களாகப் பணியாற்றி வந்த நிலையில், பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ஆனால், அவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அரசு அறிவித்த நிவாரண நிதியை கவினின் பெற்றோர் வாங்க மறுத்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் சுர்ஜித்தின் தந்தை, காவல் உதவி ஆய்வாளர் சரவணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், கவினின் உடலை பெற்றுக்கொள்ள அவர்களது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, 5 நாட்களுக்கு பின் கவினின் உடலை அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து, கவினின் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்துக்கு கொண்டு வரப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவின் உடலுக்கு, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதாராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஊர்வசி அமிர்தராஜ், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பட் ஜான் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள். இதைத் தொடர்ந்து கவினின் உடல் இடுகாட்டிற்கு கொண்டு சென்று தகனம் செய்யப்பட்டது.


 
			 
			 
			 
			 
			