தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கங்கள் சார்பில் கோரிக்கை
தமிழகம் முழுவதும் போலி பொறியாளர்களை ஒழிக்கும் வகையிலும் தரமான கட்டிடங்களை கட்டுவதற்கு வசதியாக திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி கட்டுமான பொறியாளர்களுக்கான கவுன்சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கடந்த ஆறு மாதங்களில் மூன்று மடங்கு விலை உயர்ந்துள்ள கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சங்கத் தலைவர் ஜான்சன் கூறுகையில், “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பானது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 97 கட்டிட பொறியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 25,000 உறுப்பினர்களை உள்ளடக்கியது.”
“தற்போது கட்டுமானத்துறையில் பட்டம் படித்த பொறியாளர்கள் மற்றும் பதிவு செய்த பொறியாளர்கள் இல்லாமல் கட்டிடங்கள் போலியான பொறியாளர்கள் பெயரில் மற்றும் கட்டிடத்துறைக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் கட்டிடங்கள் கட்டுவதால் கட்டிடங்கள் தரம் குறைந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது மேலும் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.”
“எனவே இதை தடுக்க திமுக அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தமிழகத்தில் கட்டிட பொறியாளர்களுக்கான கவுன்சிலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏற்கனவே குஜராத் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கட்டிட பொறியாளர்களுக்கான கவுன்சில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.”
“கட்டிட பொறியாளர்களின் பதிவு நடைமுறையை மாநிலம் முழுவதும் ஒரே பதிவு நடைமுறையை கொண்டுவர வேண்டும். மேலும் கடந்த ஆறு மாதங்களில் மூன்று மடங்கு விலை உயர்ந்துள்ள எம் சாண்ட் ஜல்லி உள்ளிட்டவற்றின் விலைகளை குறைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
“மேலும் பொறியாளர்கள் தங்கள் சான்றிதழை பதிவு செய்தால் ஆயுள் காலம் வரை செல்லத்தக்கதாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர். பேட்டியின் போது, பொறியாளர்கள் முருகன், செல்வக்குமார், சந்தனகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

