தூத்துக்குடியில் ஆணவ படுகொலை: இளைஞனின் உடலை வாங்க மறுப்பு!

தூத்துக்குடியில் ஆணவ படுகொலை: இளைஞனின் உடலை வாங்க மறுப்பு!

தூத்துக்குடி ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் சுமார் 3 மணி நேரமாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்ததையில் குற்றவாளியின் தாய் மற்றும் தந்தையை கைது செய்வோம் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி செல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் இதில் மூத்த மகன் கவின் சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கவின் சிறுவயது முதலே நெல்லை கே டி சி நகர் பகுதி அருகே உள்ள அஷ்டலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாக பணிபுரிந்து வரும் சரவணன் மற்றும் கிருஷ்ணா குமாரி ஆகியோரது மகளான சித்த மருத்துவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளனர்.

பொறியாளர் கவின் தனது தாய் மற்றும் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத போதெல்லாம் சித்த மருத்துவர் ஆன தனது தோழி வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இதேபோன்று நேற்று பிற்பகல் கவின் மற்றும் அவரது தாய் ஆகியோர் உடல்நிலை சரியில்லாத தனது தாத்தாவை மருத்துவம் பார்ப்பதற்காக தனது தோழியின் சித்த மருத்துவ நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அங்கே வந்த சித்த மருத்துவரின் தம்பி சுர்ஜித் என்பவர் கவினிடம் தனியாக பேச வேண்டுமென அழைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கவின் மற்றும் சுர்ஜித் ஆகியோர் பேசிக்கொண்டிருக்கும்போது தனது சகோதரியுடன் ஆன பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும் என்று மிரட்டியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் சுர்ஜித் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவினை கொடூரமாக வெட்டி ஆணவ கொலை செய்துவிட்டு பின்னர் காவல் துறையில் வேலை பார்க்கும் தனது பெற்றோர் துணையுடன் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

தொடர்ந்து ஆணவ கொலை செய்யப்பட்ட வாலிபர் கவினின் உடலை வாங்க மறுத்து இன்று காலை அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆறுமுக மங்கலம் பகுதியில் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் இந்த கொலையில் தொடர்புடைய மற்றும் கொலைக்கு தூண்டுதலாக இருந்த குற்றவாளிகள் மற்றும் காவல் துறையில் பணிபுரிந்து வரும் சுர்ஜித் தாய் கிருஷ்ணவேணி மற்றும் தந்தை சரவணன் ஆகியோரை பணி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் உறவினர்கள் தூத்துக்குடி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் முக்காணி ரவுண்டானா பகுதியில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பாளையங்கோட்டை உதவி ஆணையர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் 24 மணி நேரத்திற்குள் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த கொலை குற்றவாளி சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணவேணி மற்றும் தந்தை சரவணன் ஆகியோரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்வார்கள் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

காவல்துறையினர் 24 மணி நேரத்திற்குள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் நாளை இதைவிட மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். கோரிக்கை நிறைவேறும் வரை கவின் உடலை வாங்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *