அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தூத்துக்குடியில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட பத்திரிகையாளர்கள் நீண்டநாள் கோரிக்கையாக வைத்திருந்த சலுகை விலை வீட்டு மனை வழங்குதல் குறித்த பிரச்சினை இன்னும் தீர்வு காணப்படாததை கண்டித்து, தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் மோகன்ராஜ் வரவேற்புரையாற்றினார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கு தமிழக அரசின் சலுகை விலை வீட்டு மனை நான்கு கட்டங்களாக வழங்கப்பட்டு உள்ள நிலையில், தூத்துக்குடி சார்ந்த பத்திரிகை மற்றும் ஊடக துறையினருக்கு கடந்த 30 வருடத்திற்கு மேலாக தொடர்ந்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு கட்ட மனுக்களை முதலமைச்சர் முதல், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அமைச்சர் பெருமக்கள் கீதா ஜீவன், அனிதா ஆர் ராதா கிருஷ்ணன், சாமிநாதன் உள்ளிட்ட பலரிடம் மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்கள் கருப்பு உடை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் கலந்து கொண்டு சலுகை விலை வீட்டுமனை பட்டா விரைந்து வழங்கிட வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் மூத்த உறுப்பினரும் சங்கத்தின் கௌரவ ஆலோசகருமான அருண், தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் முருகன், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவர் பிரான்சிஸ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர்.
இதில் அதிமுக கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சருமான செல்ல பாண்டியன் கலந்து கொண்டு தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு விரைவில் நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் செய்தியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தை அதிமுக சார்பில் விரைவில் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார். இறுதியாக பொருளாளர் ராஜு நன்றி உரையாற்றினார்.
இந்த நடைபெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர் சங்கத் துணைத் தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஷ்குமார் மற்றும் சங்க கௌரவ ஆலோசகர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஏராளமான பத்திரிக்கை மற்றும் ஊடக துறையினர் புகைப்பட கலைஞர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

